காலையில் அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருப்பார், அம்மா அவருக்கு டீ போட்டுக் கொண்டு வந்து கொடுப்பார். இப்படிதான் பெரும்பாலான வீடுகளின் காலைப்பொழுது தொடங்கும். இதனைப் பார்க்கும் குழந்தைகளும் சமையல், அடுப்படி வேலைகள் எல்லாம் அம்மாவினுடைய பொறுப்பு என நினைத்துக் கொள்வதுண்டு.
ஆனால், அப்பா சமையல் செய்தால் எப்படி இருக்கும். இந்த மாற்றத்தை மனம் ஏற்க வேண்டும். அதற்கு சமையல் வேலைகள் பாலினத்தைத் தாண்டி அனைவருக்குமானது என்ற தெளிவு வேண்டும். இந்தத் தெளிவை குழந்தையிலிருந்தே புகுத்த வேண்டும்.

இதனை தான் கேரள அரசு செய்திருக்கிறது. சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்கப்படுத்த, பாலின-நடுநிலை பாடப்புத்தகங்களை (gender-neutral textbooks) கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் அம்மாநில பொதுக்கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி சமீபத்தில் மூன்றாம் வகுப்பு மலையாள பாடபுத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் தந்தை தரையில் அமர்ந்து கொண்டு தேங்காயைத் துருவிக் கொண்டிருக்கிறார். தன் மகளுக்கு ஸ்நாக்ஸ் செய்கிறார். அம்மா சமைத்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்க்கும் குழந்தைகளும் சமையல் என்பது அம்மாவின் வேலை என்ற எண்ணத்திலிருந்து மாற வாய்ப்புண்டு. குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் இது போன்ற படங்கள் இடம்பெற்றிருப்பதை ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
மேலும், பாலின நடுநிலைமை பற்றிய எண்ணத்தை குழந்தைகளின் மனதில் பதிய வைப்பதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.