`மகாகவியென்றாலே பேராற்றல், பேரதிசயம்…' – வியக்கும் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி!

மகாகவி என போற்றப்படும் பாரதியாரின் 143 பிறந்தநாளான நேற்று தமிழகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். பாரதியின் முழு படைப்பு தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டு, பாரதியாரின் சிறப்புகள் குறித்து பேசியுள்ளார்.

பாரதியாரின் திரு உருவச்சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பலரும் பாரதியின் படைப்புகளையும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பாரதியார் பேரன் நிரஞ்சன் பாரதி

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதியைச் சந்தித்தோம். பாரதியார் குறித்து நம்மிடம் பகிர்ந்த பேரன் நிரஞ்சன் பாரதி, “பாரதி என்பது பேராற்றல், பெரும் பிரபஞ்சம், பேரதிசயம், மகா சக்தி, உந்து சக்தி போன்ற பல வடிவங்களாக நான் அவரை உணர்கிறேன். 38 ஆண்டுக்காலம் மட்டுமே வாழ்ந்த பாரதியார், 138 ஆண்டுகள் வாழ்ந்ததைவிட அதிகமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.

சொந்தமாக வீடு கிடையாது, அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனாலும், எதைப்பற்றியும் கவலை பட்டதில்லை. அவரின் கொடையுள்ளமும், பிற உயிரினங்களின் மீதான கருணையும் தனித்துவமானது. அநீதியைக் கண்டு அறச்சீற்றத்துடன் கொதித்தெழுந்தார். அவருடைய ஒவ்வொரு சொல்லும் விவரிக்க முடியாத ஆழத்தையும் அர்த்தத்தையும் கொண்டிருக்கும். அதனால் தான் பாரதியின் கவிதைகளுக்கு விளக்க உரை எழுதும் உன்னதமான பணியைத் தொடங்கியிருக்கிறேன். பாரதியின் வரிகளுக்கு விளக்க உரையா என ஆச்சர்யத்தில் பல கேட்கிறார்கள். சில பாடல்கள் மிகவும் எளிமையாக புரியும். சில பாடல்கள் எல்லோருக்கும் முழுமையாக புரியும் என்று சொல்ல முடியாது.

பாரதியார் பேரன் நிரஞ்சன் பாரதி

என்னுடைய இந்த விளக்க உரை பாரதியை தொடர்புகொள்ளும் ஊடகமாக இருக்கும். பாரதியின் தமிழ் தாக்கம் தான் இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு இணைய வழியில் தமிழை எழுதவும் பேசவும் கற்றுக் கொடுத்து வருகிறேன். சினிமா பாடலாசிரியராகவும் கவிஞராகவும் இயங்கி வருகிறேன். ஒரே சமயத்தில் மூன்று குதிரைகளில் பயணிப்தை போல இலக்கிய உலகில் பயணிக்க முடிகிறதென்றால் அதற்கு மகாகவி மட்டுமே காரணம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.