KKR IPL Trade Idea: ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கின்றன. அனைத்து அணிகளும் தங்களது அணிவகுப்பை மாற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளத் திட்டப்படி, ஒவ்வொரு அணியும் தங்களது விடுவிக்கப்படவுள்ள வீரர் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இதற்கிடையில், முன்னாள் இந்திய வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் வீரர் தாங்கல் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source
வெங்கடேஷ் ஐயர்
“KKR அணியின் மிகப் பெரிய முடிவு வெங்கடேஷ் ஐயரை விடுவிப்பதாகவே இருக்க வேண்டும்,” என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விளக்குகையில், “கடந்த முறை ஏலத்தில் கேகேஆர், வெங்கடேஷ் ஐயருக்கு ரூ.23.75 கோடி கொடுத்தது. ஆனால், அவர் அந்த அளவுக்கு ஏற்ற விளையாட்டுத் திறன் காட்ட வில்லை. அந்த தொகை மிகவும் அதிகமான முதலீடாக மாறிவிட்டது. எனவே அவரை விடுவித்தால், KKR கைக்கு மீண்டும் 23 கோடியே 75 லட்சம் ரூபாய் திரும்ப வரும். அதுடன் மினி ஏலத்திற்காக கூடுதலாக 5 கோடி ரூபாய் அளிக்கப்படும். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு வலுவான அணியை மீண்டும் உருவாக்க முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் ஸ்பென்சர் ஜான்சன்
தொடர்ந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜேவையும் விடுவிக்க வேண்டுமென சோப்ரா கூறியுள்ளார். அவர் குறித்து, “அன்ரிச் நோர்ட்ஜே-வுக்கு ரூ.6.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் நீண்ட நாளாக களமிறங்கவில்லை. திறமை வாய்ந்த பவுலர் என்றாலும் அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவரை விடுவிப்பது அணிக்கு நன்மை தரும்,” என்றார்.
அதேபோல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். “அவரை ரூ.2.80 கோடிக்கு வாங்கினார்கள். மிட்செல் ஸ்டார்க்கு மாற்றாக இருப்பார் என நினைத்தனர். ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காமல் போனது. பளிச்சென்று விளையாடவும் முடியவில்லை,” என்று கூறினார்.
கேப்டனாக ரகானே?
“ரகானே ஒரு நல்ல கேப்டன். ஆனால், அவர் தொடக்க வீரராக களமிறங்கவில்லை என்றால், அவருக்கான இடத்தை அணியில் நீங்கள் உறுதிப்படுத்த முடியாது. அவரை வைத்திருப்பது முடியாவிட்டால், அவரை விடுவிக்கவும். ஆனால் அவர் அணியில் தொடர்ந்தால், அவரையே கேப்டனாக அறிவிக்க வேண்டும்,” என ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
About the Author
R Balaji