"த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவு ஏன்?" – தெளிவுப்படுத்தும் நடிகர் ராமராஜன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராமராஜன் ஆலங்குளம் தொகுதி தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

“அதிமுக-வில் இருந்தவர் இப்போது தடம் மாறிவிட்டாரா?” என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், விளக்கமளித்து ராமராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராமராஜன்
ராமராஜன்

அந்த அறிக்கையில், ” தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற ஏப்ரல்-23 அன்று நடைபெற உள்ள நிலையில் எனது கொள்கை, கோட்பாட்டு வழிகாட்டும் தெய்வங்களாக நான் என்றென்றும் மதிக்கும் இருபெரும் தலைவர்கள் ‘புரட்சித் தலைவர்- புரட்சித் தலைவி’ என்பதை உலகமே அறியும்.

அவர்களின் புகழைப் காப்பதும், அவர்கள் இட்ட வழியில் நடப்பதுமே என் ஆயுள் முழுவதும் நான் எடுத்துள்ள உறுதிமொழியாகும். காசுக்காகவோ, பதவிக்காகவோ ஒருபோதும் என் லட்சியத்தை மறந்து அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தடம்மாற மாட்டேன், என் தன்மானம் குறைய இடம் தர மாட்டேன் என்ற போதும்….

இத்தேர்தலில் என் சொந்த ஊரான மதுரை மேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் என் திரையுலக வாழ்வைத் தொடங்கக் காரணமான ஆரம்பகால தியேட்டர் முதலாளி தெய்வத்திரு. அம்பலகாரர் ஐயா அவர்களின் புதல்வர், மரியாதைக்குரிய அன்புச்சகோதரர் திரு. முருகன் அவர்களுக்கும்

ஆலங்குளம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும், 35 ஆண்டுகளுக்கு மேலாக என் நெருங்கிய நட்பில் உள்ள அன்பு உறவான திரு. TPV கருணாகரராஜா அவர்களின் சகோதரர் TPV வைகுண்டராஜா அவர்களின் அன்பு மகன் திரு. விபின் சக்கரவர்த்தி அவர்களுக்கும் நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில் எனது ஆதரவையும் பரப்புரையையும் தர இருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தவிர்க்க முடியாத அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் பெரிதும் நன்றிக்கடன் பட்டவன் என்ற அடிப்படையில் இந்த ஆதரவை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன் என்பதனை அனைவருக்கும் தெளிவுப்படுத்துகிறேன். என் இறுதி மூச்சு வரை இரு தலைவர்களின் வழியிலேயே பயணிப்பேன் என சத்தியமிடுகிறேன்.

ராமராஜன்
ராமராஜன்

இதற்கு வேறெந்த தனிப்பட்ட காரணமோ, காரிய உள்நோக்கமோ கிடையாது என்றும், யாரும் இதைத் தவறாக ஜோடித்து வதந்திகளைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மிக விரைவில் புதிய பட அறிவிப்போடு திரையுலகில் என் முழுக்கவனத்தை செலுத்தி என்றும் உங்கள் மக்கள் நாயகனாய் வலம் வர தயாராகிவிட்டேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.