“முதலில் உங்கள் நாட்டின் சிறுபான்மையினர்மீது கவனம் செலுத்துங்கள்!" – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

நபிகள் நாயகம் குறித்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஊடக விவாத நிகழ்ச்சியில் பேசியது, சர்வதேச அளவில் பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கிறது. நபிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பா.ஜ.க மேலிடம் நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இந்தப் பேச்சுக்கு இந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விவகாரத்தில் இந்தியா குறித்து பதிவிட்ட ட்வீட்டுக்கு, இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “பாகிஸ்தானின் அறிக்கைகள், கருத்துகளை நாங்கள் கவனித்தோம். தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் உரிமைகளை மீறுபவர்கள், மற்றொரு நாட்டில் சிறுபான்மையினரை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் அபத்தம் யாராலும் எங்கும் நிகழ்த்தப்படவில்லை.

ஷெபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தானால், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாகினர் என்பதற்கு உலகமே சாட்சியாக உள்ளது. ஆனால் இந்தியா, பாகிஸ்தானுக்கு நேர் எதிராக மாறுபட்டது. பாகிஸ்தானில் மதவெறியர்களைப் புகழ்ந்து, அவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், நம் இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் மிகுந்த மரியாதையளிக்கிறது. எனவே பாகிஸ்தான், தங்கள் நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, நல்வாழ்வில் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என அரிந்தம் பாக்சி குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்விட்டரில், “மோடியின் கீழ் இந்தியா மத சுதந்திரத்தை மிதித்து, முஸ்லிம்களைத் துன்புறுத்துகிறது. உலகம் இதைக் கவனத்தில் கொண்டு, இந்தியாவைக் கண்டிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.