மதுரை: மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு போக்குவரத்துக் கழக நஷ்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவேண்டும். போக்குவரத்து கழகங்களை நிர்வகிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ஆஜராகி, ‘‘மனுதாரர் குற்றச்சாட்டில் போதுமான முகாந்திரம் இல்லை. நஷ்டத்தை தவிர்க்க தற்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் போதுமான ஆவணங்கள் மற்றும் விபரங்களின்றி மனு செய்துள்ளார். எனவே, இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. இருந்தாலும் மனுதாரர் கோரிக்கை குறித்து, அரசுத் தரப்பில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.
