எதிர்வரும் 09 ,10ஆம் திகதிகளில்அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்து சபை ஒத்திவைப்பு விவாதம்

ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் எதிர்வரும் 08ஆம் திகதி முன்வைக்கவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  (03)  நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய எதிர்வரும் 09ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடறவிருப்பதுடன், நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி மற்றும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் தொடர்பாக கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 51 பிரேரணைகளை அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.00 மணிவரை நடைபெறும்.

அத்துடன், அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தை மறுநாள் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இரண்டாவது நாளாகவும் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, சபை முதல்வர் அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க உட்பட கட்சித் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.