பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற 'சார சங்ஹிதா' புலமை இலக்கிய நூல் வெளியீட்டு விழா

பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழா இன்று 08 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் தலைமையில் இடம்பெறும்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கடந்த வருடம் பாராளுமன்ற ‘சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலுக்கான கட்டுரைகள் கோரப்பட்டன.

சட்டவாக்க செயற்பாடுகள், நிலைபேறான அபிவிருத்தி, தேர்தல் முறைமை மற்றும் அதன் திருத்தங்கள், பாராளுமன்ற அறிக்கையிடலும் வெகுஜன ஊடகமும், பொதுமக்கள் தொடர்பு மற்றும் இலங்கை பெண்கள் அரசியலில் புதிய போக்கு ஆகிய பல்வேறு தலைப்புகளில் கல்வித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளடங்கப்பட்டுள்ளன. இதன் மீளாய்வுக் குழுவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரத்னசிறி அரங்கல, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி, களனி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஜீ. யோகராஜா, கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீ பாளி கல்லூரியின் கலாநிதி டியூடர் வீரசிங்க மற்றும் களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பதிப்பான ‘பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூல் நாட்டின் நூலகங்கள் மற்றும் தேவையானவர்களுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளது. மேலும், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தை தொடர்புகொள்வதன் மூலம் தேவையானவர்கள் இந்த நூலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எச்.ஈ. ஜனகாந்த சில்வா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.