ஐஏஎஸ் பணி விதிகளில் மாற்றம் கூடாது திமுக உட்பட 10 கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடெல்லி:  ஐஏஎஸ் பணி விதிகளில் மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக உட்பட 10 கட்சிகள் கடிதம் எழுதி உள்ளன.இது குறித்து மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், ”ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி விதிகளில் மாற்றம் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி மாநிலங்களவையில் உள்ள திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்  கட்சிகள, சிவசேனா உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள், ஓய்வு பெற்ற 38 ஐஏஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை பிரதமர்  மோடிக்கு அனுப்பியுள்ளோம். ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகளை மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய பணிக்கு அழைத்து கொள்ளலாம் என்ற வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் அதிகாரத்தையும், உரிமையை பறிக்கும் செயலாகும், எனவே, இந்த திருத்தத்தை கொண்டு வரக்கூடாது என கூட்டு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு மாநில அரசின் நடவடிக்கையை தடுக்கும் வகையிலும், மாநில அதிகாரத்துக்குட்பட்டு  கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் குறுக்கீடு செய்து தடையாக இருக்கிறார்கள்.குறிப்பாக, தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தான் ஆளுநர்களின் குறுக்கீட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்க வேண்டிய நாட்டில், அரசியலமைப்புக்கு எதிராக தொடர்ந்து பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. இது உரிய தேரத்தில் தடுக்க வேண்டும். இல்லை என்றால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.