‘தமிழ் படமா? ஹாலிவுட் ரொமான்ஸா?’: கவனம் ஈர்க்கும் வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை’ கிளிம்ப்ஸ்

காதலர் தினத்தையொட்டி இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை’ கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மதலீலை’ படத்தினை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகும் இப்படம் குறித்து, “மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்குப் பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கண்ட ஜாலியான படம். இந்தப் படம் 1980-களில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு‘ படத்தின் நவீன வடிவமாகவும், பார்வையாளர்களுக்கு புதுவித திரைக்கதை அனுபவத்தை தருவதாக இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வெறு காலக்கட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது” என்று தெரிவித்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இந்த நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. காதலர் தினத்தையொட்டி வெளியாகியுள்ளதால் கொஞ்சமல்ல, அதிகமாகவே இளமை ப்ளஸ் காதல் துடிப்புடன் முத்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளனர். ’இது தமிழ் படமா? இல்ல ஹாலிவுட் ரொமான்ஸா?’, ‘தரமான சம்பவம்’ என்றெல்லாம் கருத்திட்டு பாராட்டி வருகிறார்கள் வெங்கட் பிரபு ரசிகர்கள். அசோக் செல்வனுடன் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.