திம்பம் மலைப்பாதையில் 16 மணி நேரமாக காத்திருக்கும் வாகனங்கள்

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு நேர போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 6 மணியில் இருந்து 9 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஜீப், கார் போன்ற இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பண்ணாரி சோதனைச்சாவடி மூடப்பட்டது. இரவு நேர தமிழகம் கர்நாடக பயணிகள் பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. போக்குவரத்து தடை காரணமாக இரு மாநிலங்களிடையே பயணிக்கும் சரக்கு உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பண்ணாரியில் இருந்து புதுகுய்யனூர் வரை 4 கிமீ தூரம் காத்திருந்தன.
image
அதோபோல மற்றொரு சோதனைச்சாவடியான மாநில எல்லை காரப்பாள்ளம் முதல் கர்நாடக பகுதியான புளிஞ்சூர் சோதனைச்சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து காலை 6 மணிக்கு பண்ணாரி சோதனைச்சாவடி திறக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து துவங்கியது. பண்ணாரி வனத்தின் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதனால் வாகனங்கள் மெதுவாக புறப்பட்டுச் சென்றன. காலை 6 மணிக்கு துவங்கிய வாகன போக்குவரத்து 4 மணி நேரமாக தற்போது வரை நீடிக்கிறது. தற்போது மேலும் சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பண்ணாரியிலும் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநிலை எல்லையான காராப்பள்ளத்திலும் காத்திருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
விடிய விடிய காத்திருந்து பகலில் 4 மணி நேரம் என சுமார் 16 நேரமாக பண்ணாரியில் காத்திருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். தற்போது நிலவரப்படி பண்ணாரி புதுகுய்யனூர் முதல் கர்நாடக மாநில புளிஞ்சூர் வரை சுமார் 30 கிமீ தூரம் வரை வாகனங்கள் நிற்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அரசு பேருந்துகளும் வாகன நெரிச்சலில் சிக்கிக்கொண்டாதால் கர்நாடக செல்லும் தமிழக கர்நாடக அரசு பேருந்துகள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.
அதே போல காரப்பாள்ளம், திம்பம் மலைப்பாதையில் காத்திருந்த வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் கட்டணம் வசூலித்த ரசீதை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர். இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.