”மகானில் காந்தியை கொச்சைப்படுத்தி பணம் சேர்க்க வேண்டுமா விக்ரம்?"- தமிழருவி மணியன் பேட்டி

”காந்தி அரசியல்வாதிகளுக்கிடையே ஒரு துறவியாகவும் துறவிகளுக்கிடையே ஒரு அரசியல்வாதியாகவும் வாழ்ந்தவர். இந்தப் புரிதலோடு காந்தியை புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும்” என்று அழுத்தமாக பேசுகிறார், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘மகான்’ காந்திய கொள்கைகளைக் கொச்சைப்படுத்துவதாக சர்ச்சையாகிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழருவி மணியனிடம் புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக பேசினேன்,

விக்ரமின் ‘மகான்’ பார்த்தீர்களா?

”இன்னும் பார்க்கவில்லை. எப்போதாவது, சில நல்லப் படங்களை மட்டுமே பார்க்கும் வழக்கமுடையவன் நான். ஆனால், ‘மகான்’ படத்தில் காந்தியம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். நேற்று மாலைக்கூட ஈரோட்டிலிருந்து ஒரு சகோதரி போன் செய்து, ’அய்யா மகான் பார்த்தேன். எங்க நெஞ்சே புண்ணாகிடுச்சிங்கய்யா’ என்று கதறினார். சினிமாவைப் போன்று சக்தி மிக்க ஊடகம் உலகத்தில் வேறு எதுவுமில்லை. படிப்பறியாப் பாமரனையும் எளிதில் சென்றடையும் ஆற்றல் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. ஆனால், இந்த சினிமா உலகம், சமூகப் பொறுப்பற்று இயங்குவதுதான் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. மனிதர்களின் சிந்தனைகளைச் செழுமைப்படுத்துவதோ சமூக நலனை மேன்மைப்படுத்துவதோ இன்றைய திரையுலக பிரம்மாக்களின்  நோக்கமில்லை. நாங்கள் கலைச்சேவை செய்ய வரவில்லை என்று கூச்சமற்றுப் பிரகடனம் செய்யும் ‘மகான்கள்’ இவர்கள்.”

’மகான்’ படத்தில் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற விமர்சனங்கள் வருகின்றதே?
”’மகான்’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜோ, தங்கள் பங்களிப்பைத் தந்த பிற கலைஞர்களோ காந்தியத்தின் அரிச்சுவடிக்கூட அறியாதவர்கள். இன்றைய இளைய சமூகத்திடம் காந்திய நற்பண்புகளை விதைப்பது இவர்கள் நோக்கமில்லை. நாய் விற்ற காசு கைக்கு வந்தால் போதும் என்பதற்கு மேல் இவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இருப்பதற்கு நியாயமில்லை. கருவாடு விற்றுப் பெற்ற பணம் நாறவா போகிறது என்று யோசிக்கப் பழகியவர்களிடம் ஒரு சமூகத்தையே புரட்டிப் போடும் பரட்சிகரமான கலைப் படைப்பையா நாம் எதிர்பார்க்க முடியும்?
 
மதுவிலக்கு என்பது காந்தியத்தின் உயிர்த்தலம். ஏழ்மையின் கொடிய பிடியிலிருந்து வறியவர்களை மீட்டெடுப்பதற்காக வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராகப் போராடியவர்  மகாத்மா. 1930 ஆம் ஆண்டு நடந்த சட்டமறுப்புப் போரை முடிவிற்குக் கொண்டுவர காந்தி-இர்வின் ஒப்பந்தம் உருவானபோது, கள்ளுக்கடை மறியலை மட்டும் கைவிட மறுத்தவர் காந்தி என்பதையும்,  அதை வேறுவழியின்றி வைஸ்ராய் இர்வின் ஏற்றுக்கொண்டதையும் மகான்கள் சுப்பராஜும், விக்ரமும் அறிவார்களா? சிறிதளவாவது சமூகப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் கார்த்திக் சுப்பராஜ் ’மகான்’ படத்தை இயக்கியிருப்பாரா?
image
 ’பிதாமகன்’, ’சேது’, ’காசி’ போன்ற படங்களில் தன் அளப்பரிய நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் விக்ரம். இந்த மூன்று படங்களும் சிறந்தப் படங்கள். வாழ்ந்து காட்டியிருப்பார் மனிதர். விக்ரம் ஒரு நல்ல நடிகர். நல்ல நடிகரின் படம், நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பார்த்திருக்கலாம். ஆனால், அந்த நடிகருக்கு கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்வு இருக்கவேண்டும். இந்த நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்வையே ஒரு வேள்வியாக்கி அர்பணித்த மகாத்மாவை இப்படி மோசமாக கொச்சைப்படுத்தி சித்தரிக்கும் படத்தில் நாம் நடித்துதான் தீரவேண்டுமா என்று விக்ரம் யோசித்திருக்கவேண்டும். இந்தக் கதையை சொல்லும்போதே மறுத்திருந்தால் அது விக்ரமுக்கு பெருமையாக இருந்திருக்கும். ஆனால், கதையைக் கேட்டு இவ்வளவு மோசமான படத்தில் ஒத்துக்கொண்டார் என்றால், இவர்களுக்கு எந்த வகையிலாவது பணம் சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்தப் படத்தில் நடிப்பதும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பதும் ஒன்றுதான்.
காந்தியம் என்பது பின்பற்ற முடியாத ஒரு வறட்டுத் தத்துவம் இல்லை. அது ஓர் அற்புதமான நடைமுறை வாழ்வியல்என்பதைக் கார்த்திக் சுப்பராஜோ, நடிகர் விக்ரமோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. சினிமாக் கலைஞர்கள் செல்வத்தைக் குவிக்கவும், மனம் போனபோக்கில் இன்புற்று வாழவும், பொய்யான விளம்பர வெளிச்சத்தில் பூரித்துப் போகவும் கலைச்சேவை செய்ய வந்தவர்கள். இதில், விதிவிலக்காகச் சிலர் இருக்கக்கூடும். விதிவிலக்குகள் பொது விதியாவதில்லை.

மருந்தும், அரிசி விற்பதும் வணிகம்தான். மதுவும் வணிகம்தான். ஆனால், உயிரைக் காக்கும் பசியைப் போக்கும் வணிகத்தைத்தான் போற்றுவோம். மக்களுக்கு எதிரான மதுவை எப்படி போற்ற முடியும். அதுபோல், நல்லப் படங்கள் வந்தால் நிச்சயம் நாம் போற்றலாம். மக்களை இன்னும் பள்ளத்தில் தள்ளி பணம் பார்க்க நினைக்கிறார்கள். நல்லனவற்றை சொல்வதுதன் உண்மையான கலைச்சேவை. அப்படி இருப்பவர்களுக்கு என் தலைவணக்கம். மற்றபடி, இப்படத்தை எடுத்த இயக்குநருக்குத்தான் ஒட்டுமொத்தப் பொறுப்பும் உள்ளது. படத்தின் கேப்டனே அவர்தானே? கார்த்திக் சுப்பராஜ் எதிர்மறையான செய்திகளைச் சொன்னால் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார். அதுதான்,  இன்றைய ட்ரெண்டு. பணம்தான் இவர்களது ஒற்றை நோக்கமா?”.

ஆனால், நீங்கள் அரசியலுக்கு வரச்சொன்ன ரஜினியும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்தானே?
”வாழ்வில் தூய்மை, பொதுவாழ்வில் நேர்மை, வார்த்தைகளில் வாய்மை என்பதுதான் காந்தியம் வளர்த்தெடுத்த அரசியல். அந்த மேலான அரசியல்  இந்த மண்ணில் சீரழிந்து கிடந்ததை என் 53 ஆண்டுப் பொதுவாழ்வில் பார்த்து அன்றாடம் மனம் வெதும்பியவன் நான். கெட்டுக் கிடக்கும் சிஸ்டத்தை சரிப்படுத்துவேன் என்றார் ரஜினி. தமிழக மக்களிடம் சினிமாவுக்குள்ள மிகப் பெரும் செல்வாக்கையும், ரஜினிக்கிருந்த அளவற்ற ஆதரவையும் நான் விரும்பிய நல்ல அரசியலுக்குப் பயன்படுத்த விரும்பினேன். முள்ளை முள்ளால் எடுப்பதும், வைரத்தை வைரத்தால் அறுப்பதும்தானே நம்  முன்னோர் பயன்படுத்திய முறை. அந்த முயற்சி தோற்றுப் போனதில் எனக்கு வருத்தம் உண்டு”
image

இடையில் ரஜினியிடம் பேசினீர்களா?
“அடிக்கடி பேசிக்கொள்வோம். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். புத்தாண்டு, பொங்கலுக்கு வாழ்த்து சொல்லி அன்பை பறிமாறிக்கொண்டோம். ‘அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு என்னை பார்க்கவேண்டும் என்றார். போய் ஒருமணிநேரம் பார்த்து பேசிவிட்டுத்தான் வந்தேன். அமெரிக்காச் சென்றும் உடல்நலம் குறித்து எனக்கு மெசேஜ் அனுப்பின்னார். நானும் ‘காட் ப்ளஸ் யூ’ என்று அனுப்பினேன். பின்பு அமெரிக்காவிலிருந்து புறப்படும்போதும் எனக்கு போன் செய்தார். வந்தவுடன் வரச்சொல்லிப் பார்த்தார். அவரை வற்புறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அதில், எனக்கு வருத்தமும் இல்லை”.

காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?
”காந்தியை விமர்சித்து வரலாம். இது ஜனநாயக நாடு. பொதுவெளிக்கு வந்திருக்கும் யாருமே விமர்சனத்திற்குரியவர்கள்தான். ஆனால், காயப்படுத்தாமல் கருத்துகள் நாகரீகமாக வந்து சேரவேண்டும். ஆனால், இன்று அருவருப்பாக நடக்கிறது. காந்தியை இழித்தும் பழித்தும் கூற ஒரு கூட்டம் உள்ளது. அவர்களுக்கு காந்தியைப் பற்றி ஒன்றும் தெரியாது. காந்தி அனைவரின் பொது சொத்து. யாருடைய தனிவுடமையும் கிடையாது. யார் வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம். ஆனால்,விமர்சிப்பவர் யார் அவர்களுடைய மனப்போக்கு என்ன என்பது வெளிப்பட்டுவிடும்.”

உங்களுக்குப் பிடித்தப் படங்கள்?
”நான் பள்ளியில் பயின்றபோது ’பாகப்பிரிவினை’ பார்த்தேன். அது எனக்குக் கூட்டுக் குடும்பத்தின் சிறப்பைச் சொல்லிக் கொடுத்தது. ’பாசமலர்’ பார்த்தேன். அது சகோதர பாசத்தின் மேன்மையை உணர்த்தியது. ’பாலும் பழமும்’ பார்த்தேன். அது கணவன்-மனைவியின ஆன்மநேயக் கலப்பை அறிமுகப்படுத்தியது. ’பாவமன்னிப்பு’ எனக்குச் சமய நல்லிணக்கத்தைப் பாடமாகப் போதித்தது.

அக்காலம் தமிழ்த் திரையுலகின் பொற்காலம். ஆனால், இன்று? பேட்டை ரௌடியாகவும், பாலியல் பிறழ்ந்த காமுகனாகவும், எல்லாவித இன்பங்களையும் மனச்சான்றின் உறுத்தலே இல்லாமல் அனுபவிக்கத் துடிக்கும் விடலையாகவும் நம் இளைஞர்களை மாற்றும் சீரழிந்த படங்களே பெரும்பாலும் சமூகத்தை முற்றுகையிடுகின்றன. ‘மகான்’ படம் எடுத்தவர்களுக்கும், மராட்டியத்தில் கோட்சேவை நாயகனாக வடிவமைத்து நாடகம் நடத்துபவர்களுக்கும் பெரிய வேற்றுமை இல்லை. இன்றைய சினிமா உலகம் தவறுகளுக்குத் தலைவாரிப் பூச்சூட்டுவதையே தன்னுடைய வேலையாகச் செய்து வருகிறது”.
image
காந்தியத்தின் இன்றைய தேவை என்ன?
” இன்றல்ல என்றுமே காந்தியம் தேவைதான். காந்தியம் ஒவ்வொரு தனிமனிதனுக்குரிய வாழ்க்கை விதிகளையும் வரையறை செய்து வைத்திருக்கிறது. சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், திருடாமை, உடைமையின்மை, உடல் உழைப்பு. நாவடக்கம், அஞ்சாமை, சமய ஒற்றுமை, சுதேசி. தீண்டாமை ஒழிப்பு ஆகிய 11 மகாவிரதங்களை வலியுறுத்துவதுதான் காந்தியம். இவற்றுள் எந்த ஒன்றையும் ஏற்று நடக்க இன்றைய இளைய தலைமுறையில் பெரும்பாலானவர்கள் மனத்தளவில் கூட தயாராக இல்லை. இவர்களின் இச்சைகளுக்குத் தீனி போட்டுக் காசு சேர்ப்பதே இப்போதைய கலையுலகப் பிரம்மாக்களின் ஒற்றை நோக்கமாகிவிட்டது”.
வினி சர்பனா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.