சிலிண்டர் விலை உயர்வு – பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிப்பு?

சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக, மத்திய அரசுக்கு, ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் நாள் போரையடுத்து, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்தது. எனினும், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று முதல் 105 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் இன்று முதல் 2,012 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 27 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்படி, சிலிண்டர் ஒன்றின் விலை 569 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. எனினும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயரவில்லை.

இதேபோல் தமிழகத்திலும் வர்த்தக உபயோக கேஸ் சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்ந்து 2,145.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. வணிக சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் உணவு விலை பல மடங்கு உயர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 5 மாநில தேர்தல் காரணமாக விலை உயர்த்தப்படாமல் இருந்த வந்த பெட்ரோல், டீசல் விலையும் மீண்டும் உயரும் என கூறப்படுகிறது. தற்போதே 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ள நிலையில் மீண்டும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. நாளை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் உயர்த்தியதன் மூலம் சாதாரண மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கும், தங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்பதை மோடி அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இன்று எல்.பி.ஜி., நாளை பெட்ரோல், டீசலா?” என, கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.