ஓம் நமச்சிவாய, ஜெய் பீம், பெரியார்… சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பில் வெடித்த முழக்கங்கள்!

Chennai corporation councilors oath taking ceremony incidents: சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, சிங்கார வேலர் வாழ்க, எம்ஜிஆர் பாடல் என பல்வேறு முழுக்கங்களுடன் பதவியேற்றனர்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடந்து முடிந்த, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிகளில் மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி ஆணையர்களும், நகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நகராட்சி ஆணையர்களும், பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.

அந்தவகையில், பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியின் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகளும், அதேபோல கட்சிகளுக்கு ஏற்றவாறு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. கவுன்சிலர்கள் பதவியேற்கும்போது, கட்சி, குடும்ப உறுப்பினர்கள், குலதெய்வத்துக்கு நன்றி தெரிவித்து பதவி ஏற்றுக் கொண்டனர். சிலர் பல்வேறு தலைவர்களுக்கு மரியாதை செலுத்தியும், பாடல்கள் பாடியும் பதவியேற்றுக் கொண்டனர்.

தளபதி ஐயாவாழ்க! ஸ்டாலின் ஐயா வாழ்க! எனக்கூறி 2-வது வார்டு  சுயச்சை உறுப்பினர் கோமதி பதவி ஏற்றுக்கொண்டார்.

வெல்க பொதுவுடைமை கொள்கை; வெல்க திராவிட மாடல். வாழ்க ஸ்டாலின் ஐயா! வாழ்க விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 42-வது வார்டு உறுப்பினர் ரேணுகா பதவி ஏற்று கொண்டார்.

59-வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த சரஸ்வதி பதவி பிரமாணம் எடுக்கும்போது கண் கலங்கி பதவி ஏற்றார்.

92வது வார்டு சுயேட்சை உறுப்பினர் திலகர் பதவியேற்கும் போது, கை கைவிட்டது; ஆனால் மக்கள் கைவிடாமல் என்னை தேர்ந்தெடுத்தார்கள். வாக்கு அளித்த மக்கள், சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி பதவி ஏற்றார்.

மாமன்றத்தின் இளம் வயது உறுப்பினரான, 98-வது வார்டின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயது பிரிய தர்ஷினி, சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நாமம் வாழ்க என முழுக்கமிட்டு பதவி ஏற்றார்.

73-வது வார்டின் உறுப்பினரான, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அம்பேத்வளவன் எனும் குமாரசாமி பதவியேற்கும்போது, அம்பேத்கர், காரல் மார்க்ஸ், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், முன்னாள் மேயர் சிவராசு உள்ளிட்டோர் பெயரை நினைவுகூர்ந்து உறுதியேற்பதாக பதவியேற்றார்.

இதையும் படியுங்கள்: இங்கே மட்டும் அ.தி.மு.க – பா.ஜ.க மீண்டும் கூட்டணி: ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஒப்புதல்

திமுக-வைச் சேர்ந்த 104வது வார்டு உறுப்பினர் செம்மொழி பதவி ஏற்பை முடிக்கும் போது ‘ஒம் நமசிவாய என குறிப்பிட்டார்.

மற்றொரு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினரான, 107-வது வார்டின் கவுன்சிலர் கிரண் ஷர்மிலி, புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க, பெரியார் வாழ்க, முதல்வர் ஸ்டாலின் வாழ்க, எழுச்சித்தமிழர் திருமா வாழ்க, ஜெய் பீம் என கூறி பதவியேற்றார்.

அடுத்ததாக சுவாரஸ்யமாக, திமுக-வைச் சேர்ந்த 111 வது வார்டு உறுப்பினர் நந்தினி மாமனார் மீது ஆணை என கூறி பதவி ஏற்றுக்கொண்டார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 123 வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி மோகன், சோசலிசம் ஓங்குக என முழுக்கமிட்டு பதவி எற்றார்.

அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பை தொடங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, திமுகவைச் சேர்ந்த 128 வது மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா பதவி ஏற்றார்.

‘நான் தினமும் வணங்கும் தில்லை அம்பளத்தான் மற்றும் அரங்கனுக்கும் கோடி நமஸ்காரம்’, ‘தெய்வ அணுகிரகத்தால் வெற்றி பெற்றேன்’ என்று கூறி 134வது வார்டு உறுப்பினரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான உமா ஆனந்தன் பதவி எற்றார்.

167 வது வார்டில் வெற்றிப் பெற்ற, திமுகவைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணியான துர்கா தேவி நடராஜன் பதவி ஏற்றுக்கொண்டார்.

”பதவி வரும் போது பணிவு வர வேண்டும்” என்ற எம்ஜிஆர் பாடல் பாடி பதவியேற்றார் 193 வது வார்டு அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி. அப்போது கச்சேரி நிகழ்ச்சியா இது என திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு நீங்கள் பேசியதை நான் பாடினேன் அவ்வளவுதான் என அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி பதிலளித்தார்.

மற்ற திமுக உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி சொல்லி பதவி ஏற்றுக் கொண்டனர். மதிமுக கவுன்சிலர்கள் வைகோவுக்கு நன்றி சொல்லியும், விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர்கள் அம்பேத்கர் மற்றும் பெரியாருக்கு நன்றி சொல்லியும் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.

இவ்வாறு பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளோடு, சென்னை மாநகராட்சி உறுப்பினர்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.