சசிகலாவுக்கு ஆதரவாக அணிவகுக்கும் பிரபலங்கள் யார், யார்?

அதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறிவரும் நிலையில், அதிமுகவில் சிலர் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பி அணி வகுத்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அதிமுக சார்பில், புதன்கிழமை இரவு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவருடைய நெருங்கிய தோழியான சசிகலா, அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளரானார். தொடர்ந்து அவர், முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற முயன்றபோது ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கி எதிர்ப்பு தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். முதலமைச்சரான பழனிசாமி விரைவிலேயே ஓ.பன்னீசெல்வத்துடன் சேர்ந்து கட்சியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சசிகலா தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்த பின், அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால், தேர்தலுக்கு பிறகு, அதிமுகவைக் கைப்பற்ற நடவடிக்கை என்று கூறி அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசி ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். அதுமட்டுமல்ல, சசிகலாவுடன் போனில் பேசியவர்களையும் சசிகலாவுக்கு ஆதரவு அளித்தவர்களையும் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தனர்.

இதனிடையே, அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது.

இந்த சூழலில்தான், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அதிமுக சார்பில், புதன்கிழமை இரவு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பெரியகுளத்தில் தங்கியிருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வியாழக்கிழமை காலை சந்தித்துப் பேசினார்.

கைலாசபட்டியில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்திற்கு, அதிமுக மாவட்டச் செயலர் எம். சையதுகான் தலைமை வகித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அப்போது, சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நிபந்தனையற்றப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மேலும், சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, சசிகலா, டி.டி.வி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற குரல் எழுப்பி அதிமுகவில் பிரபலங்கள் பலரும் அணிவகுத்து வருகின்றனர்.

சசிகலா, டி.டி.வி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து, அதிமுக தேனி மாவட்ட செயலாளர் எம். சையதுகான் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “அதிமுக பிளவுபட்டுள்ளதால் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நிபந்தனையற்றப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

இந்தத் தீர்மானத்திற்கு மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, கட்சித் தலைமைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.

இதனிடையே, கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைத்து, அவர்களது தலைமையில் கட்சி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சசிகலா மற்றும் டி.டி.வி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்டம், பெரியகுளம் அதிமுகவில் திர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஊடகங்களிடம் கூறுகையில், “அதிமுகவில் ஒற்றுமை ஏற்பட்டால்தான் இந்த கட்சி காப்பாற்றப்பட முடியும் என்று நான் பல முறை கூறி வருகிறேன். இப்போதுதான் அதற்கு வழிபிறந்த மாதிரி இருக்கிறது. ஏனென்றால், ஒருங்கிணைப்பாளர் இருக்கும் இடத்தில் இருந்து இந்த தீர்மானம் வந்திருக்கிறது. அதிமுகவில் 50-60 சதவீத நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அனைத்து மாவட்டங்களும் இதே போல தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது குறித்து ஓ.பி.எஸ் விரைவில் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்க வேண்டும். சசிகலாவை இணைத்து செல்ல வேண்டும். பழனிசாமி மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று நம்புகிறேன். அப்படி அவர் மறுப்பு தெரிவித்தால் அதிமுகவினர் ஒப்புக்கொள்ளக் கூடாது.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.