ரஷிய படைகளுக்கு எதிரான வன்முறை பதிவுகளுக்கு பேஸ்புக் அனுமதி

நியூயார்க்,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.  ஐ.நா. அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.  போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.

எனினும், ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் தனியாளாக ஈடுகொடுத்து வருகிறது.  இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.  இதேபோன்று விளையாட்டு, வணிகம் உள்ளிட்ட பல துறைகளிலும், ரஷியாவுக்கு எதிரான தடையை பல நாடுகள் விதித்து வருகின்றன.  இதனால், ரஷிய விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.  அமேசான் உள்பட பல வணிக நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்தி உள்ளன.
இந்நிலையில், ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்புக் அனுமதி அளித்துள்ளது.  இதுபற்றி பேஸ்புக் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள படையெடுப்பினை முன்னிட்டு, ரஷிய படை வீரர்களுக்கு மரணம் போன்ற பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில், விதிகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.  ஆனால், குடிமக்களுக்கு எதிராக நம்பகதன்மை வாய்ந்த அச்சுறுத்தல்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.