ஹலால் இறைச்சி ’முஸ்லிம்களின் பொருளாதார ஜிஹாத்’ – பாஜக தேசியச் செயலர் சி.டி.ரவி கருத்தால் சர்ச்சை

பெங்களூரு: “ஹலால் இறைச்சி என்பது முஸ்லிம்களின் பொருளாதார ஜிஹாத் என விமர்சித்துள்ளார் பாஜக தேசியச் செயலர் சி.டி.ரவி. தமிழக பாஜக பொறுப்பாளராகவும் உள்ள இவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கர்நாடகாவில் சமூக வலைதளங்களில் இந்துக்கள் ஹலால் இறைச்சி வாங்குவதைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாக வரவிருக்கும் இந்துக்களின் புத்தாண்டான உகாதிக்குப் பின்னர் அனைவரும் ஹலால் இறைச்சியை முற்றிலுமாக புறக்கணிக்குமாறு கோரிக்கைகள், வலதுசாரி ஆதரவு அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக உகாதிக்கு (வருடப் பிறப்பு) மறுநாள் இந்துக்களின் ஒரு பிரிவினர் தங்களின் தெய்வங்களுக்கு இறைச்சியைப் படையலாகப் போடும் பழக்கம் கர்நாடகாவில் இருக்கிறது. இந்தப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கே வலதுசாரி அமைப்புகள் ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.

இது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பாஜக தேசியச் செயலர் சி.டி.ரவி, “ஹலால் இறைச்சி என்பது முஸ்லிம்களின் பொருளாதார ஜிஹாத். இது முஸ்லிம்கள் தங்கள் மக்கள் மற்ற மதத்தினவரிடம் இறைச்சி வாங்கக் கூடாது என்பதற்காக வகுத்த கொள்கை. இதற்காக அவர்கள் ஹலால் இறைச்சி மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கும்போது, ஹலால் இறைச்சி பயன்படுத்த வேண்டாம் என்று மற்றொரு தரப்பு நினைப்பதில் என்ன தவறு.

அவர்களின் இறைவனுக்கு ஹலால் இறைச்சி உகந்ததாக இருக்கலாம்; ஆனால் இந்துக்களுக்கு அது உகந்தது அல்ல. இறைச்சி, அது சார்ந்த பொருட்களை அனைவரும் முஸ்லிம்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை அவர்கள் வகுத்துள்ளனர். அதுதான் பொருளாதார ஜிஹாத்.

இந்துக்களிடம் முஸ்லிம்கள் இறைச்சி வாங்கமாட்டார்கள் என்றால், இந்துக்களையும் முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்க வற்புறுத்தக் கூடாது. முஸ்லிம்கள் ஹலால் செய்யப்படாத இறைச்சியை உண்ணத் தயாரானார்கள் என்றால் இந்துக்களும் ஹலால் இறைச்சியை வாங்க முன்வருவார்கள். வாணிபம் என்பது ஒருவழி போக்குவரத்து அல்ல, அது இருவழிப் போக்குவரத்தையும் அனுமதிப்பது” என்று கூறினார்.

இந்நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி.குமாரசாமி, “கர்நாடக இந்து இளைஞர்கள் இதுபோன்ற வெறுப்பைக் கைவிட வேண்டும். மாநிலத்தை நாசமாக்கிவிடக் கூடாது. இங்கு இன அமைதியும் நம்பிக்கையும் இருக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.