ஆந்திராவில் 42 ஆண்டுகளுக்கு பிறகு கூடுதலாக 13 புதிய மாவட்டங்கள் உதயம்: காணொலியில் முதல்வர் தொடங்கி வைத்தார்

திருமலை, ஏப்.5: ஆந்திராவில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆந்திராவில் இப்போது 26 மாவட்டங்கள் மற்றும் 72 வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களில் நேற்று முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்களில் கலெக்டர்கள், எஸ்பிக்கள் பொறுப்பேற்று கொண்டனர்.இந்நிலையில், புதிய மாவட்டங்களை தாடேபள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெகன்மோகன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், 26 மாவட்ட கலெக்டர், எஸ்.பிக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் காணொலியில் முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது:ஒரு நல்ல பணியை தொடங்கியுள்ளோம். ஆந்திரப் பிரதேசம் 26 மாவட்டங்களைக் கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. புதிதாக பார்வதிபுரம் மான்யம், அல்லூரி சீதாராமராஜ், அனகாபள்ளி, காக்கிநாடா, கோனசீமா, ஏலூர், என்டிஆர், பல்நாடு, பாபட்லா, அன்னமய்யா, திருப்பதி, நந்தியாலா, சத்யசாய் ஆகிய 13 மாவட்டங்கள் உருவாகியுள்ளன. மேலும், தற்போதுள்ள 13 மாவட்டங்களின் பெயர்கள் அப்படியே உள்ளன. பிரகாசம் மாவட்டம் மார்ச் 1970ல், விஜயநகர மாவட்டம் ஜூன் 1979ல் உருவாக்கப்பட்டது. இவை இரண்டும் கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் உருவான புதிய மாவட்டங்களாகும். நிர்வாக வசதி மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தின் தேவைக்கேற்ப புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.