விருதுநகர்: கோவிலாறு அணையில் செத்து மிதக்கும் மீன்கள்! உண்மையைக் கண்டறியுமா பொதுப்பணித்துறை?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை. பிளவக்கல் பெரியாறு அணை 47 அடி முழு கொள்ளளவும், கோவிலாறு அணை 42 அடி முழு கொள்ளளவும் கொண்டது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக இரு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் பாசன வசதிக்காக அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டது.

42 அடி முழு கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையில் தற்போது நீர்மட்டம் 18 அடியாக உள்ளது. இந்த இரு அணைகளிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதியின் பேரில் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. அவை மீன்களாக வளர்ந்த பின்பு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கோவிலாறு அணையில் ஜிலேபி, சிசி உள்ளிட்ட மீன் குஞ்சுகள் அதிக அளவில் விடப்பட்டு வளர்ந்து வந்தன. இந்நிலையில், கோவிலாறு அணையில் இன்று மாலை, மீன்கள் அனைத்தும் திடீரென செத்து மிதந்தன.

செத்து மிதக்கும் மீன்கள்

நீரின் மேற்பரப்பு முழுவதும் வெண் நுரை பரப்பி வைத்தாற்போல் அணையின் மொத்த பரப்பளவுக்கும் மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதியே பரபரப்பானது. நீரில் செத்து மிதக்கும் மீன்களால் தற்போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் முன் நீரை சுத்தம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்‌ கோரிக்கை விடுத்துள்ளனர்.

செத்து மிதக்கும் மீன்கள்

மீன்கள் செத்து மிதப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”அணையில் 18 அடி தண்ணீர் உள்ளது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீன்கள் இறந்திருக்கலாம் என்று நினைக்கிறோம். இது சம்பந்தமாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அணையில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த மீன் பிடிக்கும் பணியாளர்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணையிலுள்ள தண்ணீரை சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். அது முடிவு வந்தால் மட்டுமே மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.