வீழ்ச்சி அடைந்த இலங்கை.. பரிதவிக்கும் மக்கள்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் இன்றைய நிலை இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கையாகும். இலங்கையிடமிருந்து
இந்தியா
பாடம் கற்க வேண்டும் என்று டெலிகிராப் கட்டுரை கூறியுள்ளது.

இலங்கை
மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கஜானா காலியாகி விட்டது. நாடு திவாலாகி விட்டது. உலகம் முழுக்க கடன் வாங்கி வைத்து விட்ட ராஜபக்சே சகோதரர்களால் இன்று நாட்டை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மக்கள் பரிதவிக்கின்றனர். விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளது. இந்தியாவிடம் கடன் கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் சிங்கள ஆட்சியாளர்கள்.

இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை என்று டெலிகிராப் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமையன்று இலங்கையில் அவசர நிலையை அறிவித்தார் அதிபர் கோத்தபயா ராஜபக்சே. அதற்கு அவர் சொன்ன முக்கியக் காரணங்கள், பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு ஆகியவையே. ஆனால் உண்மையான காரணம், மக்கள் தனது அரசுக்கு எதிராக பெரும் புரட்சியில் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் நோக்கமே இதன் பின்னணியில் இருந்தது.

கோத்தபயா அரசு அனைத்து வழியிலும் தோல்வி அடைந்து விட்டது. அவரது வீட்டு முன்புகூடிய மக்கள் கூட்டம், “பைத்தியக்காரனே பதவியை விட்டு விலகு” என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தியது. அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டதே மக்களின் இந்தக் கோபாவேசத்திற்கு காரணம்.

“அவர்கள் முதலில் தமிழர்களிடம் வந்தார்கள்”.. சிங்களர்கள் குமுறல்!

13 மணி நேர மின் தடை, காலியாகக் கிடக்கும் பெட்ரோல் பம்ப்புகள், உணவுப் பொருள், அடிப்படை மருந்துகள் கிடைக்காத நிலை, அதிகரித்து வரும் பண வீக்கம் என எல்லா வழியிலும் இலங்கை திகைத்துப் போய் நிற்கிறது. மக்களைக் காப்பதற்காக அவசர நிலையை கோத்தபயா ராஜபக்சே கொண்டு வரவில்லை. மாறாக “அரசியல் சாம்ராஜ்யத்தை” காக்கும் அவசர நடவடிக்கையே இது.

இந்தியத் துணைக் கண்டத்தில் பல அரசியல் குடும்பங்கள் உள்ளன. அதில் ராஜபக்சே குடும்பமும் முக்கியமானது. தங்களுக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்ட குடும்பம் இது. பசில் ராஜபக்சே நிதியமைச்சராக இருக்கிறார். அவரது அண்ணன் கோத்தபயா ராஜபக்சே அதிபராக இருக்கிறார். இன்னொரு அண்ணன் மகிந்தா ராஜபக்சே பிரதமராக இருக்கிறார். அவர் அதிபராகவும் இருந்திருக்கிறார். இந்த அரசில் நான்கு ராஜபக்சே சகோதரர்கள், மகிந்தாவின் மகன் நமல் ராஜபக்சே ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமா.. இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த டான் டேவிட் ராஜபக்சே, டான் மாத்யூ ராஜபக்சே ஆகியோர் ஒரு காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான்.

ஆனால் இலங்கையின் எந்த அரசியல் குடும்பமும் செய்திராத அளவுக்கு மிகப் பெரிய பாதிப்பை இலங்கைக்கு ராஜபக்சே குடும்பம் செய்து விட்டது. இங்கிலாந்திடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற அடுத்த 25 ஆண்டுகள் மிகப் பெரிய வளர்ச்சியுடன் கூடிய நாடாக திகழ்ந்தது. மிகச் சிறந்த தெற்காசிய வெற்றிக் கதையாக இலங்கை திகழ்ந்தது. சிறந்த கல்வியறிவு, வலிமையான பொது விநியோகத் திட்டம், சிறந்த சுகாதாரத் திட்டம் என இலங்கை எல்லா வகையிலும் சிறந்த நாடாக திகழ்ந்தது.

“ஒருங்கிணைவோம் வா”.. பாஜகவுக்கு எதிராக.. டெல்லியில் நின்று ஸ்டாலின் அறைகூவல்!

ஸ்ரீமாவோ பண்டாரநாயகே இலங்கையின் முதல் பெண் பிரதமராக பதவி வகித்தவர். இலங்கையின் பல விஷயங்கள், இலங்கையைத் தாண்டி பல நாடுகளிலும் பிரபலமானது. இலங்கை வானொலி அதில் ஒன்று. அதில் ஒளிபரப்பான தமிழ்ப் பாடல்களை, தமிழ்நாட்டு வானொலி நிலையங்கள் கூட அதிகமாக ஒலிபரப்பு செய்திருக்காது. தமிழையும், தமிழ்நாட்டு கலாச்சாரத்தையும், தமிழ் சினிமாவையும் தமிழ்நாட்டை விட அதிகம் கொண்டாடியது இலங்கை வானொலிதான்.

இலங்கையின் கதை வித்தியாசமானது. இந்தியாவைப் போல விடுதலைக்குப் பிறகு அது குடியரசு நாடாக மாறவில்லை. மாறாக,டொமினியன் நாடாக திகழ அது முடிவு செய்தது. 1972ம் ஆண்டு வரை இங்கிலாந்து ராணி எலிசபெத்தான் அதன் தலைவராக இதருந்தார். அதன் பின்னரும் கூட அதன் மாற்றம் பெரிதாக இல்லை. சிங்கள – புத்த குடியரசாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது இலங்கை. புத்த மதத்தையே அது தூக்கிப் பிடித்தது. பிற மதங்களை புறம் தள்ளியது. அதற்கேற்ப அதன் அரசியல் சாசனமும் அமைந்தது.

இதுதான் இலங்கையின் தலைவிதியையும் மாற்றியது. புத்த மதத்தையும், சிங்களத்தையும் மட்டும் அரசியல் சாசனம் தூக்கிப் பிடித்ததால், உள்நாட்டுப் போர் வெடித்தது. தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடத் தொடங்கினர். உரிமைகளைக் கேட்டு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். அதை ஒடுக்க ஆயுத பலத்தை கையில் எடுத்தது இலங்கை. ஆரம்பத்தில் அமைதி முறையிலான போராட்டங்கள் வெடித்த நிலையில் பின்னர் இது ஆயுதப் போராட்டமாக மாறியது. பிரபாகரன் உருவானார்.. அவரது விடுதலைப் புலிகள் இயக்கம், இலங்கை அரசுக்கும், அதன் ராணுவத்துக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியது. இலங்கையின் போக்கையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலை உலக மக்களை உலுக்கியது. ஆனாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவும், உதவிக் கரம் நீட்டவும் உலக நாடுகள் முன்வரவில்லை. இதனால் தமிழர்கள் தங்களுக்காக தாங்களே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்தவரை சிங்கள அரசுகளால் ஈழத்தை எதுவும் செய்ய முடியவில்லை. தனி அரசாங்கத்தையே நடத்தினர் விடுதலைப் புலிகள்.

என்னைக் கொல்லப் போறாங்க.. விடாமல் போராடுவேன்.. இம்ரான் கான் அலறல்!

இந்த நிலையில்தான் மகிந்தா ராஜபக்சே அரசு அமைந்தது. அதன் பின்னர் அவர் எடுத்த குயுக்தியான பல முடிவுகளால் அவருக்கு சாதகமான நிலை உருவானது. இந்தியாவின் முழு ஆதரவைப் பெற்றார். உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றார். பல நாட்டுப் படைகளின் ஆதரவும் அவருக்குக் கிடைத்தது. விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டால், சிங்களர்களின் ஆதரவை நிரந்தரமாக பெற முடியும் என்று கணக்குப் போட்டார். அதற்கேற்ப செயல்பட்டார். ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டனர். அவர்களது தலைவர்கள் கொல்லப்பட்டனர். வடக்கில் கிடைத்த இந்த வெற்றியை வைத்து தெற்கில் உள்ள சிங்களர்களின் ஹீரோவாக மாறினார் ராஜபக்சே. தனது அத்தனை அரசியல் எதிரிகளையும் அவர் வீழ்த்தினார், முடக்கினார், ஓரம் கட்டினார்.

மதரீதியாகவும், இன ரீதியாகவும் சிங்கள மக்களை தவறான முறையில் வழி நடத்தி வந்த அவருக்கு அந்த இரண்டுமே பின்னர் எதிரிகளாக மாறத் தொடங்கின. 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் உள்ள சர்ச்சில் நடந்த மிகப் பெரிய குண்டுவெடிப்பு நாட்டையே உலுக்கியது. இதைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரான துவேஷப் போரில் ராஜபக்சே சகோதரர்கள் குதித்தனர். இதை வைத்தே கோத்தபயா ராஜபத்சே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். முதலில் தமிழர்களை எதிரிகளாக சித்தரித்தனர். பின்னர் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கினர். இரு பெரும் எதிரிகளிடமிருந்து சிங்களர்களை காக்க எங்களால்தான் முடியும் என்று உருவகப்படுத்தினர். அதில் வெற்றியும் பெற்றனர். தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்சே சகோதரர்களுக்கே வெற்றி கிடைத்தது. மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை என்ற மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்தார் மகிந்தா ராஜபக்சே, பிரதமரும் ஆனார். இன்று அதே பெரும்பான்மை பலம்தான் அவருக்கு எதிராக மாறி நிற்கிறது.

அறுதிப் பெரும்பான்மை பலம் என்பதே எப்போதுமே ஆபத்துதான். இப்படித்தான் டொனால்ட் டிரம்ப் ஜெயித்தார். இம்ரான் கான் ஜெயித்தார்,
நரேந்திர மோடி
ஜெயித்தார், யோகி ஆதித்யநாத் ஜெயித்தார்… இன்னும் பல உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம். எங்களால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துதான் இந்தத் தலைவர்கள் எல்லாம் மக்களின் கவனத்தை ஈர்த்து மிகப் பெரும் வெற்றியை ஈட்டினர். ஆனால் வாக்காளர்களை ஈர்ப்பதில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி, ஆட்சியை நடத்துவதில் அவர்களுக்கு அமையவில்லை.

இம்ரான் கான் வெற்றி பெற்ற விதத்தைப் பாருங்கள்.. இன்று பாகிஸ்தானை பெரும் பொருளாதார சீரழிவில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார் இம்ரான் கான். சவூதி அரேபியாவுடன் முதலில் நெருக்கமாக இருந்தார். பின்னர் அமெரிக்கா பக்கம் மாறினார். பாகிஸ்தான் ராணுவத்தை பகைத்துக் கொண்டார். இடையில் வந்த கொரோனாவும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை பதம் பார்த்தது. அதேபோலத்தான் இன்று கோத்தபய ராஜபக்சேவும் அடுத்தடுத்து பல தவறுகளைச் செய்து நாட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். தன்னிடம் பெரும்பான்மை இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணமே இவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம்.

கோத்தபயா வீட்டுக்கு வெளியே “அட்டாக்”.. தீவிரவாதிகள் அட்டகாசம் இது.. அலறும் இலங்கை!

2019ம் ஆண்டு மறைமுக வரிகளை பாதியாக குறைத்தார் கோத்தபயா ராஜபக்சே. வருமான வரியையும் குறைத்தார். கொரோனா பேரிடர் காலத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் அரசுக்கு வரி வருவாய் அடியோடு குறைந்தது. இதுதவிர சுற்றுலா மூலம் கிடைத்து வந்த வருவாய் அப்படியே நின்று போனது. இதனால் குழம்பிப் போன கோத்தபயா ராஜபக்சே, அடுத்தடுத்து எடுத்த பல தவறான முடிவுகளால் பொருளாதாரம் நிர்மூலமானது. அவர் அறிமுகப்படுத்திய ஆர்கானிக் பார்மிங் மிகப் பெரிய சீரழிவை ஏற்படுத்தியது. விவசாயம் ஸ்தம்பித்துப் போனது.

விலைவாசி உயர்ந்தது. அரசு நிர்வாகத்தை நடத்துவது சிரமமானது, கடன் தொல்லை மறுபக்கம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வந்தது. தட்டுப்பாடு வந்ததால் விலை கடுமையாக உயர்ந்தது, ஏற்றுமதி நின்று போனது. அதிக அளவில் இறக்குமதி செய்ததால் கடன் சுமை அதிகரிக்க ஆரம்பித்தது. எந்தப் பிரச்சினைக்கும் ஆக்கப்பூர்வமான தீர்வு காண கோத்தபயாவும் சரி, மகிந்தாவும் சரி முயற்சிக்கவே இல்லை. மாறாக நாடாளுமன்றத்தில் நமக்கு பெரும்பான்மை இருக்கிறது, நமக்கு ஆபத்து இல்லை என்ற அளவில்தான் அவர்கள் அக்கறையின்றி செயல்பட்டு வந்தனர்.

பெரும்பான்மை பலம் இருக்கிறது என்ற தைரியத்தில் டிரம்ப் எடுத்த அமெரிக்க – மெக்சிகோ இடையிலான சுவர் பிரச்சினை அவரது செல்வாக்கை காலிசெய்தது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டதால் நரேந்திர மோடி கடும் அதிருப்தியை சந்தித்தார். அதேபோல ஆர்கானிக் புரட்சியை அறிவித்து இலங்கை மக்களின் கடும் வெறுப்பை கோத்தபயா சம்பாதித்தார். ஆனால் இப்படியெல்லாம் செய்தும் கூட மோடி மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தார். ஆர்கானிக் பார்மிங் புரட்சியை அறிவித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்தும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. கொரோனா பேரலையிலும் கூட பெரும் அதிருப்தியை சம்பாதித்த யோகி ஆதித்யநாத் மீண்டும் வெற்றி பெற்றார்.

இன்று இலங்கை சந்தித்து வரும் பிரச்சினைகள் அந்த நாடு மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல.. அந்த நாட்டுடன் நின்று போவதும் அல்ல.. நமக்கும் கூட ஒரு எச்சரிக்கைதான், பாடம்தான். சுதாரிப்புடன் இருக்க வேண்டியது நமது கடமையாகும்.

அடுத்த செய்திபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்: ஜனாதிபதி அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.