திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் நேரிடையாக செல்ல அனுமதி

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் தரிசிக்க டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.

அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் தங்கும் விடுதி ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தன.

கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பக்தர்கள் டோக்கன் வாங்க குவிந்ததால் கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த 4 நாட்களாக இலவச தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வந்தனர்.

நேற்று கவுண்டர் திறக்கப்பட்டு இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டது.

அங்கு நேற்று முன்தினம் இரவு முதலே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 3 பக்தர்கள் காயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள், போலீசார் திணறினர்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைவரும் டோக்கன் வாங்காமல் நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இனி மேல் முன்போல் இருந்தது போலவே டோக்கன் வாங்காமலேயே பக்தர்கள் இலவச தரிசனம் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தரிசன பக்தர்கள் திருமலையில் உள்ள வைகுண்ட காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வைகுண்ட காம்ப்ளக்ஸ் அறைகள் அனைத்தும் நிரம்பி வெளியே நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

ஏற்கனவே இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் முதலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் நேற்று தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 35 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் 1 லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நேற்று முதல் கூடுதலாக 100 பஸ்கள் இயக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து பொது மேலாளர் செங்கல்வ ரெட்டி தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக இலவச தரிசனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 72,567 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 40,468 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.