புதுடில்லி : டாக்டர்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகள் ஆகியவற்றில் காதி பொருட்களை பயன்படுத்தும்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரிய தலைவர் டாக்டர் அருணா வானிகர், அனைத்து மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி உள்ள அறிக்கை விபரம்:
அனைத்து டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவமனை நிர்வாகங்கள் ஆகியவை காதி பொருட்களை ஊக்குவிக்க வேண்டும். இதனால் காதி பொருட்களை தயாரிப்போர் பயன்பெறுவர். காதி துணியில் தயாரிக்கப்பட்ட வெள்ளை கோட்டுகளை டாக்டர்கள், அணியலாம். மேலும், பெட்ஷீட், தலையணை உறை, திரைச் சீலை, சோப்பு, கை கழுவும் திரவம் உள்ளிட்ட பல்வேறு காதி பொருட்களை, மருத்துவமனைகள் பயன்படுத்தலாம்.
இதன் வாயிலாக காதி தொழிலை சார்ந்துள்ள கிராமப்புற சமூகம் சுயசார்புடன் மேலும் வலுப்பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் முதன் முறையாக இத்தகைய அறிக்கையை அனுப்பிஉள்ளது.
இந்த அறிவுரை செயல்பாட்டிற்கு வந்தால், காதி கிராமோத்யோக் நிறுவனத்தின் விற்றுமுதல் மேலும் உயரும். கடந்த நிதியாண்டில், காதி கிராமோத்யோக் நிறுவனத்தின் விற்றுமுதல், 20 சதவீதம் உயர்ந்து, 95 ஆயிரத்து 741 கோடியில் இருந்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 415 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
Advertisement