மும்பை: கடைசியாக 2018ம் ஆண்டு ஜீரோ என்ற இந்தி படத்தில் ஷாருக்கான் நடித்தார். கடந்த 4 ஆண்டுகளாக அவரது எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது ஒரே நேரத்தில் பதான், டன்கி, ஜவான் என 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த 3 படங்களுமே அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் படத்தில் ஜான் ஆப்ரஹாம், தீபிகா படுகோன் உடன் நடித்துள்ளனர். இந்த படம் 2023ம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வர உள்ளது. அதே ஆண்டில் ஜூன் மாதம் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ஜவான் படம் 5 மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது. ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டன்கி படம் வெளியாகும். இதில் ஷாருக்கான், தர்மேந்திரா, டாப்ஸி நடித்து வருகின்றனர். இந்த 3 படங்களையும் சேர்த்து ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஷாருக்கானின் 3 படங்கள் ஒரே ஆண்டில் வெளியானது கிடையாது. இப்போதுதான் முதல்முறையாக இதுபோல் வெளியாக உள்ளது.
