தாராள உதவிகளுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லேவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லே அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஜூன் 02ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, உணவு, எரிபொருள், உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இலங்கைக்கு தற்போது வழங்கப்படும் உதவிகள் குறித்து உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார். இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் அவர் கலந்துரையாடினார்.

குறிப்பாக இலங்கைக்கு சவாலான நேரத்தில் இந்தியா வழங்கிய தாராளமான மற்றும் தொடர்ச்சியான உதவிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார்.

உணவு, எரிசக்தி பாதுகாப்பு, மருந்துப் பொருட்கள் வழங்குதல், கடன் மற்றும் எஸ்.டப்ளிவ்.ஏ.பி. ஏற்பாடுகள் ஆகியவற்றின் மூலமான குறிப்பிடத்தக்க ஆதரவு போன்ற அனைத்து துறைகளிலும் நல்கப்பட்ட மகத்தான அளவிலான இந்திய உதவிகளை இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை அரசாங்கம் ஆழமாக பாராட்டுவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார்.

பல்லாண்டுகளாக நெருங்கிய அண்டை நாடுகளாகத் திகழும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளின் முக்கிய முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் பாராட்டினர்.

இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூன் 06

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.