நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, பா.ஜ.க மேலிடம் நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இருப்பினும், சர்ச்சையாக கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மா கைதுசெய்யப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், இந்த விவகாரத்தில் மோடியையும், பா.ஜ.க-வையும் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சஞ்சய் சிங், “பா.ஜ.க தலைவர்களும், அதன் செய்தித் தொடர்பாளர்களும் பிரதமர் மோடியின் வெறுப்பு அரசியல் பயிற்சியால் தவறு செய்கிறார்கள். அதன் விளைவுகளை தற்போது இந்த முழு நாடுமே சந்தித்துவருகிறது. இது 130 கோடி இந்தியர்களையும் அவமதிக்கும் செயல்” என்றார்.
முன்னதாக இதே விவகாரத்தில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, “நுபுர் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது, ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்” என ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.