கிறிஸ்தவ அமைப்பு மூலம் அமெரிக்காவுக்கு கோடி கணக்கில் பணம் கடத்திய பினராய் விஜயன்; கோடியேரி பாலகிருஷ்ணனும் உடந்தை: சொப்னாவின் ஆடியோவால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோரின் கோடிக்கணக்கான பணம், கிறிஸ்தவ அமைப்பின் மூலம் பலமுறை அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது என்று சொப்னா நேற்று வெளியிட்ட ஆடியோவில் கூறப்பட்டிருப்பது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய விவகாரம் இரண்டு வருடங்களுக்கு பின் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடத்தலில் முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.இந்த விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயன் பதவி விலகக் கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் வலுத்துள்ளது. கடந்த 4 தினங்களாக திருவனந்தபுரத்தில் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.நேற்றும் கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் உள்பட பல இடங்களில் போலீசாருக்கும், காங்கிரஸ், பாஜ, புரட்சி சோஷலிஸ்ட் கட்சி உள்பட எதிர்க்கட்சி  தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்நிலையில், நேற்று காலை பாலக்காட்டில் சொப்னா கூறியதாவது:  ஷாஜ் கிரண் என்பவரும், அவரது கூட்டாளியான இப்ராஹிம் என்பவரும் என்னை சந்தித்தனர். நீதிமன்றத்தில் கூறியுள்ள தகவலால் ஒன்றாம் நம்பர் விஐபி கடும் கோபத்தில் இரு ப்பதாகவும் உடனடியாக வாக்குமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஷாஜ் கிரண் என்னிடம் கூறினார்.அந்த ஒன்றாம் நம்பர் விஐபி யார் என்று எனக்குத் தெரியாது. அதை ஷாஜ் கிரணிடம் தான் கேட்க வேண்டும். அவர் என்னை மிரட்டிய ஆடியோவை நான் மாலையில் வெளியிடுவேன். அந்த வீடியோவில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் உள்ளன. இவ்வாறு சொப்னா தெரிவித்தார். அதன்படி நேற்று மாலை ஷாஜ் கிரணுடன் பேசிய ஆடியோவை சொப்னா வெளியிட்டார். அதில், கேரள முதல்வர் பினராய் விஜயனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனும் சேர்ந்து பிலீவர்ஸ் சர்ச் என்ற கிறிஸ்தவ அமைப்பின் மூலம் அமெரிக்காவுக்கு பலமுறை கோடிக்கணக்கில் பணம் கடத்தினர் என்று ஷாஜ் கிரண் பேசும் தகவல் இடம்பெற்றிருந்தது. இதன்பின் சொப்னா கூறியது: ஷாஜ் கிரணை எனக்கு சில வருடங்களாக தெரியும். ரியல் எஸ்டேட் புரோக்கர் என்று அவர் கூறி வந்தாலும் அவருக்கு பல முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. என்னுடைய மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் கூறியது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் அவர் பேசும் ஆடியோவை நான் பதிவு செய்தேன். என்னுடைய ஆபாச வீடியோ சிலரிடம் இருப்பதாகவும், ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் அது வெளியாகும் என்றும் கூறி என்னை அவர் மிரட்டினார். இவ்வாறு அவர் கூறினார். சொப்னா வெளியிட்டுள்ள இந்த ஆடியோ கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதில் எந்த உண்மையும் கிடையாது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.முதல்வர், அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: சொப்னா வெளியிட்ட தகவலை தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயன் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பல பகுதிகளில் போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்பட பல பகுதிகளில் தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்ள வேண்டாம் என்று முதல்வர் பினராய் விஜயனுக்கு உளவுத்துறை  அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர வெடிகுண்டு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.