மகேஷ் நாராயணன் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் கமலுக்கு ஒரு கம்பேக் கொடுத்துள்ள படமாகவும் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து விக்ரம் 3 படம் உருவானால் அதையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்று கமல் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். அதேசமயம் கமல் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் எடிட்டராக இருந்து இயக்குனராக மாறிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் தான் நடிக்க இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கமல்.

இந்த படத்திற்கு தானே ஸ்கிரிப்ட்டும் எழுதியுள்ளார் கமல். விஸ்வரூபம் முதல், இரண்டாம் பாகங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் இந்த மகேஷ் நாராயணன். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் டேக் ஆப், சி யூ சூன், மாலிக் என பகத் பாசில் நடித்த படங்களாக தொடர்ந்து இயக்கி அங்கே வரவேற்பை பெற்றார் மகேஷ் நாராயணன். இந்த நிலையில்தான் மகேஷ் நாராயணனை தமிழில் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார் கமல். ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் கமல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.