லண்டன்:கட்சியினரின் தொடர் விமர்சனங்கள், அமைச்சர்கள் ராஜினாமா போன்ற நெருக்கடிகளைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்தன் பதவியை ராஜினாமா செய்தார்.புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை, அதாவது அக்டோபர் மாதம் வரை காபந்து பிரதமராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவர் மீது, கொரோனா காலத்தில் மது விருந்து கொடுத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த மாதம், கட்சியினர்தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து தப்பினார்.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் துணை தலைமை கொறடாவாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட எம்.பி., கிறிஸ் பின்சரை போரிஸ் ஜான்சன் நியமித்தார். கிறிஸ் பின்சர் மீது மது போதையில் தவறாக நடந்தது உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில், அவரை முக்கிய பதவியில் நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, கிறிஸ் பின்சரை அந்தப் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கிய போரிஸ் ஜான்சன், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.
இதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சனுக்கு கட்சியில் எதிர்ப்பு அதிகரித்தது. இந்தியாவை பூர்வீகமாக உடைய ரிஷி சுனாக், நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து, பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித்தும், தன் பதவியை ராஜினாமா செய்தார்.இதற்கிடையே மேலும் சில அமைச்சர்கள், எம்.பி.,க்கள் என, 50 பேர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கட்சியில் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இந்நிலையில், தன் முடிவை அறிவித்து, போரிஸ் ஜான்சன் கூறியதாவது:கடந்த, 2019 பொதுத் தேர்தலில் மக்கள் மிகப் பெரும் வெற்றியை நமக்கு தந்தனர். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கட்சியினரின் விருப்பத்தை ஏற்று, மிகுந்த வருத்தத்துடன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, காபந்து பிரதமராக இருப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விவாதம் துவங்கியுள்ளது. ரிஷி சுனாக், ஈராக்கை பூர்வீகமாக உடைய அமைச்சர் நதிம் ஜகாவி ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement