ஓ.பி.எஸ் இனி அனாதை; மத்திய அரசு எங்களை அங்கீகரித்து விட்டது: ஆர்.பி உதயகுமார்

RB Udhayakumar says OPS has been orphaned, Centre recognize us: அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் அலட்சியமாக நடந்துக் கொண்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அனாதையாகிவிட்டார் என்று தமிழக சட்டசபையில் ஓ.பி.எஸ்-க்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. பொதுக்குழுவில் அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் நியமித்த புதிய நிர்வாகிகள்: வைத்திலிங்கம்- இணை ஒருங்கிணைப்பாளர்

அதேநேரம், ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்தார்.

இதனிடையே, ஓ.பி.எஸ் வசம் இருந்த சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அங்கீகரிக்க கோரி சட்டமன்ற சபாநாயகருக்கு இ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தநிலையில், ஓ.பி.எஸ்-ன் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகளை சந்தித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், மின் கட்டணத்தை உயர்த்தும் தி.மு.க அரசின் முடிவுக்கு எதிராக ஜூலை 26 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார்.

அப்போது தொண்டர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு தி.மு.க அரசு உடந்தையாக இருந்தது. மூத்த நிர்வாகிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையை ஓ.பன்னீர்செல்வம் உதாசீனப்படுத்தினார். மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். ஆனால், தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு தனது சர்வாதிகார போக்கில் நடந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று அரசியல் அனாதையாகிவிட்டார்.

பதவி விலகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்க அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதில் இருந்து பா.ஜ.க தலைமையிலான அரசும் அவரை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்தது தெளிவாகிறது, என்று கூறினார்.

மேலும், தேனியில் நடைபெறும் போராட்டம் மிகவும் வலுவாகவும், பெரியதாகவும் இருக்க வேண்டும் என்றும், அது இ.பி.எஸ்.ஸுக்கு தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்கள் ஆதரவை வெளிப்படையாகக் காட்டும் வகையில் இருக்க வேண்டும் என்றும் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.