மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் | நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் மீண்டும் ரெய்டு – ரூ.15 கோடி ரொக்கம் சிக்கியது

கொல்கத்தா: மேற்குவங்க கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்றில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் 15 கோடி ரூபாய் ரொக்கமாக மீட்கப்பட்டுள்ளது.

அதேபோல், தங்க நகைகள், தங்க கட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவின் பெல்காரியா பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட பணத்தை வங்கி அதிகாரிகள் அந்த இடத்திலேயே நோட்டு எண்ணும் இயந்திரம் மூலம் பணத்தை எண்ணினர். மேலும், அலமாரியில் இருந்து சில குறிப்புகளையும் அமலாக்கத்துறை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக, கடந்தவாரம் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு குடியிருப்பில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதோடு ரூ.54 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், ரூ.79 லட்சம் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 40 பக்க குறிப்புகள் கொண்ட டைரியை அதிகாரிகள் மீட்டதாகவும், பல சொத்து பத்திரங்களையும் மீட்டதாகவும் தகவல் வெளியாகின.

வழக்கின் பின்னணி:

கடந்த 2016-ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வித் துறையில் 13,000 ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணி நியமனத்தில் சில ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அப்போதைய கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் கடந்த ஏப்ரல் 25, மே 18-ம் தேதிகளில் சிபிஐ பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பெருமளவில் பணப் பரிமாற்ற மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது.

கொல்கத்தாவில் உள்ள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சில தினங்கள் முன் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இப்போது அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.