தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை கடந்தது

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றியஅரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. வரி விதிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. இந்நிலையில், 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலை உயர்ந்தது. 23ம் தேதி ஒரு சவரன் ரூ.37,568, 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 25ம் தேதி ஒரு சவரன் ரூ.37,760, 26ம் தேதி ரூ.37,824 என்றும் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,735க்கும், சவரன் ரூ.37,880 என்றும் விலை உயர்ந்தது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4767க்கும், சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38136க்கும் விற்கப்பட்டது. 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ச்சியாக 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1096 வரை அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.