அதிகரிக்கும் எம்.பி.க்களின் இடைநீக்கம் – எதிர்க்கட்சிகளிடம் அஞ்சுகிறதா மோடி அரசு?!

நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து, இரு அவைகளையும் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 27 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலர் 50 மணிநேர தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். வெயில், மழை, கொசுக்கடிகளையும் சகித்துக்கொண்டு ஜனநாயகப் போராட்டத்தை நடத்தி வருவதாகவும், எங்கள் மீதான இடைநீக்க உத்தரவு ஒரு ஜனநாயகப் படுகொலை என்றும் போராடும் எம்.பிக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

காந்திசிலை முன்பு போராட்டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்

மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கியது. ஆனால், விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜி.எஸ்.டி, எதிர்க்கட்சிகள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.

அந்த நிலையில், ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் டி.என்.பிரதாபன் உள்ளிட்டோர் கேஸ் விலை உயர்வு குறித்த போராட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, `நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடாமல், சபையின் விதிமுறைகளை மீறி, இடையூறு விளைவித்ததற்காக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நான்கு எம்.பிக்களையும், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கக்கூடாது’ எனக்கூறி இடைநீக்கம் செய்தார்.

காங்கிரஸ் எம்.பிக்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் டி.என்.பிரதாபன்

அந்த நிலையில், ஜூலை 27-ம் தேதி கூட்டத்தில் மீண்டும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்து விவாதம் நடத்தவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்ட தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், டி.ஆர்.எஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்

அதைத்தொடர்ந்து, ஜூலை 29-ம் தேதியும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் இடைநீக்கம், குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு, விலைவாசி உயர்வு போன்றவை குறித்து விவாதம நடத்தவேண்டும் எனக்கோரி அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சுஷில்குமார் குப்தா, சந்தீப்குமார் பதக் மற்றும் சுயேச்சை எம்.பி. அஜித்குமார் புயான் உள்ளிட்ட மூன்று பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுவரை மாநிலங்களவையில் 23, மக்களவையில் 4 என மொத்தம் 27 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த இடைநீக்கத்தை எதிர்த்தும், ரத்து செய்யக்கோரியும் திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் 50 மணிநேர தொடர்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் எம்.பிக்கள்

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் நடைபெற்றுவரும் எம்.பிக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. எம்.பி.க்கள், ‘ஜனநாயக படுகொலை’ என்ற வாசகம் அடங்கிய கருப்பு முகக்கவசத்தை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரியன் (Derek O’Brien), “இந்த அரசு ஜனநாயகத்தை இடைநீக்கம் செய்துள்ளது” என்றிருக்கிறார். மேலும், “இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. ஆனால் நாங்கள் அரசுக்கு ஒன்றை கூறுகிறோம். நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் குறித்து பேச முடியவில்லை. இதற்காக அரசுதான் மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுகின்றன” என தெரிவித்திருக்கிறார்.

போராட்டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்

தொடர்ந்து திரிணாமுல் காங். எம்.பியான சுஸ்மிதா தேவ், “பணவீக்கத்துக்கு மோடி அரசிடம் பதிலில்லை. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக எங்களை இடைநீக்கம் செய்தது நியாயமற்றது. நாங்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவோம்” என்றிருக்கிறார். மற்றொரு எம்.பி. டோலா சென் (Dola Sen), “போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒரு கூடாரம் அமைத்து தர எழுத்துப் பூர்வமாக கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “எதிர்க்கட்சிகளைப் பார்த்து பிரதமர் மோடியும், பா.ஜ.க அமைச்சர்களும் அஞ்சுகிறார்கள்; நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடி ஒளிகிறார்கள்” என விமர்சித்திருக்கிறார்.

கொசுக்கடியில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்

இரவு, பகலாக போராடிவரும் சஸ்பெண்ட் எம்.பிக்கள் கடுமையான கொசுக்கடியிலும், மழை, வெயிலில் சிரமப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு கொசு விரட்டிகூட கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மேலும், ஆளுங்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடக்கும் பகுதியை தவிர்த்துவிட்டு வேறுவழியில் வெளியேறுகிறார்கள் என்றும் தங்கள்மீதான இடைநீக்க நடவடிக்கை ஒரு ஜனநாயகப் படுகொலை என்றும் கூறியிருக்கின்றனர்.

பாஜக தரப்பிலோ, எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விரும்பவில்லை. அமளி செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். தொடக்கத்தில், அமளியின் போது கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. எனினும் அவை மரியாதைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படும் போது, அவைத் தலைவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார். இதில் பாஜக ரோல் எதுவும் இல்லை என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.