கேரளாவில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தை தமிழகத்தை சேர்ந்த சுங்க அதிகாரி கைது: நகைகள், ரூ.4.5 லட்சம் பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கக் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த சுங்க இலாகா கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார். கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானத்தில் 2 பயணிகள் தங்கம் கடத்துவதாக மலப்புரம் மாவட்ட எஸ்பி.க்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதில், காசர்கோட்டை சேர்ந்த அப்துல் நசீர் (46), ஜம்ஷீர் (20) சிக்கினர். அவர்களிடம் இருந்து 360 கிராம் தங்கத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது, அவர்களின் செல்போனில் தொடர்ந்து அழைப்பு வந்தது. போலீசார் அந்த போனை வாங்கி, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அதில் பேசிய நபரிடம் கூறினர்.

அதன்படி, அந்த நபர் வந்தார். போலீசார் அவரையும் கைது செய்து, அவரிடம் இருந்த 320 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். விசாரணையில், அவர் கோழிக்கோடு விமான  நிலையத்தில் பணிபுரியும் சுங்க இலாகா கண்காணிப்பாளர் முனியப்பன் என தெரிந்தது. பொள்ளாச்சியை சேர்ந்தவர். நசீரும், ஜம்ஷீரும் 640 கிராம் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். அதை கைப்பற்றிய முனியப்பன், 320  கிராமுக்கு அபராதம் கட்டும்படியும், ரூ.25 ஆயிரம் தந்தால் மீதி தங்கத்தை தானே வெளியே கொண்டு வந்து  தருவதாகவும் கூறியுள்ளார். அதன்படி, பணத்தை வாங்கிக் கொண்டு தங்கத்தை கொடுக்க வந்தபோது தான் அவர் சிக்கினார். 6  மாதங்களுக்கு முன்புதான் கோழிக்கோடு விமான நிலையத்தில் இவர் பணியில்  சேர்ந்துள்ளார். இவர் தங்கியிருந்த லாட்ஜில் போலீசார் நடத்திய சோதனையில், 4 பயணிகளின் பாஸ்போர்ட், ரூ.4.5 லட்சம் பணம், 500 அமீரக  திர்ஹாமும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.