தென்னக ரயில்வே ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை இல்லை: பெண் ஓட்டுநர்கள் அவதி

ரயில்

Getty Images

ரயில்

நாடு முழுவதும் ஓடும் ரயில் எஞ்சின்களில் 120 மின்சார ரயில் எஞ்சின்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. தென்னக ரயில்வேயில் ஒரு ரயிலில் கூட எஞ்சினில் கழிப்பறை வசதிகள் செய்யப்படாததால் ரயில் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்கள் ரயில் எஞ்சின்களை இயக்கி வருகின்றனர். அவ்வாறு இயக்கும் போது ரயில் எஞ்சினில் கழிவறை வசதி செய்யப்படாததால் ரயில் ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் பெண் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் எஞ்சினில் உள்ள கழிப்பறை வசதி சம்பந்தமாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்டிஐ மூலம் ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு இந்திய ரயில்வே மின்சார பிரிவு இயக்குனர் அனுராக் அகர்வால் அளித்துள்ள பதிலில், “இந்தியா முழுவதும் 120 டபுள்யு.ஏ.ஜி (W.A.G), 9 மின்சார எஞ்சின்களில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 மின்சார ரயில் எஞ்சின்களில் கழிப்பறை வசதி அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிக சொற்ப எஞ்சின்களில் மட்டுமே கழிப்பறைகள்

29 ஜூலை 2019, 05 ஆகஸ்ட் 2019 ஆகிய தேதிகளில் ரயில் எஞ்சின்களில் கழிப்பறை அமைக்கும் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 120 ரயில் எஞ்சின்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் ஆண், பெண் ரயில் ஓட்டுனர்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் 31 மே 2017 அன்று முதன் முதலாக மின்சார ரயில் எஞ்சினில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டீசல் எஞ்சின்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் குறித்து மற்றொரு துறைக்கு தான் தெரியும்” என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே மின்சார பிரிவு இயக்குனர் அளித்த பதிலின் அடிப்படையில் இந்தியாவில் மொத்தம் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் 9 மண்டலங்களில் உள்ள குறிப்பிட்ட சில மின்சார எஞ்சின்களில் மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயில் இயங்கும் ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி செய்யப்படவில்லை என இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை இல்லை

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ரயில் பயணிகளின் நலனுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்கப்பட்டு அதற்கான பதிலும் பெறப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் சுமார் இரண்டாயிரம் பயணிகள் உயிர் அந்த ரயிலை இயக்கும் ரயில் எஞ்சின் ஓட்டுனர்கள் மற்றும் துணை ஓட்டுநர்கள் இருவர் கையில் தான் உள்ளது. எனவே, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்கள் ரயிலை அமைதியான மனநிலையில் இயக்க முடியும்.

பாண்டியராஜன்

BBC

பாண்டியராஜன்

திருவனந்தபுரம் கோட்டத்தில் மட்டும் 3 பெண் லோகோ பைலட்களும் 12 துணை லோகோ பைலட்கள் என மொத்தமாக 15 பெண் லோகோ பைலட்கள் ரயிலை இயக்கி வருகின்றனர். அதேபோல், தென்னக ரயில்வேயில் 6 கோட்டங்கள் என இந்தியாவில் மொத்தம் 1500 பெண் லோகோ பைலட்டுகள், 50 ஆயிரம் ஆண் லோகோ பைலட்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையில் பாதி அளவுதான் ரயில் எஞ்சின்கள் எண்ணிக்கை உள்ளது.

இவர்கள் அனைவரும் சுமார் 2 முதல் 3 மணி நேரம் தொடர்ந்து ரயில்களை எந்தவிதமான இடை நிறுத்தல் இல்லாமல் இயக்க கூடியவர்கள் ஆனால் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான எஞ்சினில் வசதிகள் எதுவும் இல்லை.

சரக்கு ரயில்களை பெரும்பாலான பெண்கள் ஓட்டுனர்கள் இயக்கி வருகின்றனர். அந்த ரயில் எஞ்சின்களிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. தென்னக ரயில்வேயில் உள்ள ஒரு ரயில் எஞ்சின்களில் கூட கழிப்பறை வசதி இல்லை என்பது தான் உண்மை” என்கிறார் பாண்டியராஜன்.

புல்லட் ரயில்களுக்கு ஆர்வம் காட்டும் ரயில்வே துறை ரயில் ஓட்டுனர்களை கண்டுகொள்ளாதது ஏன்?

தொடர்ந்து பேசிய பாண்டியராஜன், ரயில் நிலையங்களின் கட்டமைப்புகளில் மாற்றம், ரயில் எஞ்சின்களில் உயர்தர தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ரயில்வே துறை ஏன் ரயில் பயணிகளின் பாதுகாவலனாக இருக்கக்கூடிய ரயில் எஞ்சின் ஓட்டுனர்களுக்கு முறையான ஒரு அடிப்படை செய்து கொடுக்கவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 16 மண்டலங்கள் உள்ளன. அதில் 9 மண்டலங்களில் மிக சொற்ப அளவில் ரயில் எஞ்சின்களில் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 7 மண்டலங்களில் ஒரு ரயில் எஞ்சினில் கூட கழிப்பறை வசதி செய்து கொடுக்கவில்லை.

எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக தென்னக ரயில்வேயில் இயக்கப்படும் அனைத்து ரயில் எஞ்சின்களிலும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குறிப்பாக நீண்ட தூரம் நிற்காமல் செல்லும் சென்னை- மதுரை தேஜஸ் ரயிலுக்கு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து ரயில் எஞ்சின்களிலும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தும் வரை ரயில் எஞ்சினுக்கு அடுத்ததாக உள்ள பெட்டியில் உள்ள கழிப்பறையை ரயில் ஓட்டுனர்கள் பயன்படுத்தும் வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என பாண்டியராஜன் கேட்டு கொண்டார்.

நடுவழியில் கழிப்பறை தேடி அலையும் பெண் ஓட்டுநர்கள்

ரயில் எஞ்சினில் கழிப்பறை வசதி இல்லாதது குறித்து பெண் ரயில் ஓட்டுனர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் தென்னக ரயில்வேயில் லோகோ பைலட் பணி செய்து வருகிறேன். நான் வேலைக்கு சேரும் காலங்களில் பெண் ரயில் ஓட்டுனர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

தற்போது ஆண்களுக்கு இணையாக பெண் ரயில் ஓட்டுநர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால் லோகோ பைலட் ஆக பணிபுரியும் பெண்கள் ரயில் எஞ்சின்களில் கழிப்பறை வசதி இல்லாததால் பல்வேறு உடல் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.

தொடர்ச்சியாக 5 மணிநேரம் ரயில்களை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அந்த நேரத்தில் எப்படி எங்களால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியும். சில நேரங்களில் சிக்னலுக்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலைகள் ஏற்படும் அந்த நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக ரயில் நிலையங்களில் இருக்கும் கழிப்பறைகள் அல்லது ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறை களை பயன்படுத்தி கொள்வோம்.

ரயில் எஞ்சினுக்கு அடுத்துள்ள பெட்டிக்கு சென்றால் அங்கு ஆண்கள் கூட்டமாக இருப்பார்கள் அதனால் கழிப்பறை பயன்படுத்த முடியாது. சில நேரங்களில் முதல் இரண்டு பெட்டிகளும் அடைக்கப்பட்டு இருக்கும் அதனால் சிறிது தூரம் நடந்து சென்று அடுத்தடுத்த பெட்டிகளுக்கு செல்ல நேரிடும். நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் ஒரு பெண் தனியாக இப்படி செல்லும் போது அவளுடைய மன நிலை எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்.

இதுகுறித்து பலமுறை ஈமெயில் மூலமாக கேள்விகள் எழுப்பியும் இதுவரை எங்களுக்கு ரயில்வே துறையில் இருந்து முறையாக பதில் கிடைக்கவில்லை.

இந்திய ரயில்வே துறையில் வேலை செய்யும் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்குமே இயற்கை உபாதைகளை கழிப்பதில் பெரும் பிரச்னை உண்டு. அதில் பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். பல மணி நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் பிரச்னை ஏற்படுகிறது” என்கிறார் பெண் ஓட்டுநர்.

மாதவிடாய் நேரங்களில் பெண் ஓட்டுநர்கள் நிலைமை மிகவும் மோசம்

தொடர்ந்து பேசிய பெண் ஓட்டுனர், “மாதவிடாய் நேரங்களில் குறிப்பிட்ட சில நேர இடைவெளியில் கழிப்பறை செல்ல வேண்டும். கழிப்பறை இல்லாததால் மாதவிடாய் நேரங்களில் பேடுகள் மாற்ற முடியாமல் பல நேரங்களில் சிறுநீர் தொற்று ஏற்பட்டு விடும். கழிப்பறை வசதி இல்லாததால் இவ்வாறான பிரச்னைகளை பெண்கள் பழக்கப்படுத்திக் கொண்டனர்.

மிகவும் கஷ்டத்தை அனுபவித்து தான் பெண்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும் பெண் என்பதால் எந்த ஒரு இடத்திலும் தாழ்ந்து போய் விடக்கூடாது என்ற ஒரு வைராக்கியத்தில் பெண்கள் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்.

என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் ஒரு முறை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சிறுநீரை அடக்கிக் கொண்டு ரயிலை இயக்கிக் கொண்டிருந்தேன். இதனால் சிக்னலை பார்க்காமல் கடந்து வந்துவிட்டேன் எனக்கு அதற்கான தண்டனை வழங்கப்பட்டது. இது குறித்து என்னுடைய உயர் அதிகாரிகள் என்னிடம் கேள்வி எழுப்பிய போது கூட முதலில் கழிப்பறை சென்று சிறுநீர் கழித்துவிட்டு தான் அவருடைய கேள்விக்கு பதிலளித்தேன். இவ்வாறு ஒரு இறுக்கமான மனநிலையில் தான் பெண்கள் இந்த லோகோ பைலட் பணியை செய்து வருகின்றனர்.

விரைவில் கழிப்பறை பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது. ரயில்வே துறை ரயில் எஞ்சின்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் பெண் ரயில் ஓட்டுநர் பணியில் சேரும் ஆர்வம் காலப்போக்கில் பெண்கள் மத்தியில் குறைந்துவிடும்” என்கிறார் பெண் ரயில் ஓட்டுனர்.

இது ஒன்றும் புதிய பிரச்னை அல்ல

அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழகம் இணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் 1990களில் ரயில்வே துறையில் பணியில் சேர்ந்தேன். அன்றிலிருந்தே இந்த பிரச்னை இருந்து வருகிறது. ஆனால் அப்போது இடைநில்லா ரயில்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இந்த பிரச்னை பெரிய அளவில் பேசப்படவில்லை.

பார்த்தசாரதி

BBC

பார்த்தசாரதி

தற்போது இடைநில்லா ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க பட்டுள்ளதுடன், பெண் ரயில் ஓட்டுனர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் இந்த பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறதே தவிர இது புதிய பிரச்னை அல்ல.

இந்த பிரச்னை தொடர்பாக 2004ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சர் நிதீஷ் குமார் ஆலோசித்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.

ரயில் ஓட்டுனர்கள் உரிய இயற்கை உபாதைகளை கழிக்காததால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். ரயில் எஞ்சின்களில் கழிப்பறை இல்லாததால் சிறுநீர் கழிக்க முடியாது என்ற அச்சத்தில் ஓட்டுனர்கள் போதிய அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதில்லை.

இதனால் பெரும்பாலான ரயில் ஓட்டுனர்களுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்படுகிறது. வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல் பிரச்னைகள் முன்னதாகவே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது.

போராட்டம்

BBC

போராட்டம்

ரயில் ஓட்டுனர்களுக்கு சிக்னல்கள் மிக முக்கியமானது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் 33 நொடிகளுக்கு ஒரு சிக்னலை கடந்து செல்கிறது. ஆனால் மன அழுத்தம் காரணமாக ஓட்டுனர்கள் அந்த சிக்னல்களை தவற விடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

ரயில் எஞ்சின்களில் கழிப்பறைகள் இல்லாததால் பெரும்பாலான ரயில் ஓட்டுநர்கள் மனநலக் கோளாறுக்கு ஆளாகின்றனர்.

ஒரு ரயில் நிலையத்திற்குள் வருவதற்கு முன்பே பிளாட்பாரத்தில் எந்த பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பது துல்லியமாக தெரிகிறது. அதேபோல் எஞ்சின்கள் எங்கு நிற்கும் என்பது முன்கூட்டியே தெரியும். அந்த இடத்திற்கு அருகே ரயில் ஓட்டுனர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு கழிப்பறை கட்டி வைத்தால் நிச்சயம் ரயில் ஓட்டுனர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, ரயில் எஞ்சின்களில் கழிப்பறைகளை கொண்டு வருவதற்கு முன்பு இதை ரயில்வே துறை செய்ய வேண்டும் என பார்த்தசாரதி கேட்டு கொண்டார்.

கூடிய விரைவில் நடவடிக்கை

ரயில் ஓட்டுனர்களின் கழிப்பறை தேவை குறித்து ரயில்வே துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ஆரம்பத்தில் இருந்து ரயில் எஞ்சின்களில் கழிப்பறை அமைப்பதற்கான உள்கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. ரயில் ஓட்டுனர்கள் தொடர்ந்து கழிப்பறை பிரச்னையை முன் வைப்பதால் ரயில் எஞ்சின்களில் கழிப்பறை அமைப்பதற்கான வடிவமைப்பு தயார் செய்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் கூடிய விரைவில் கழிப்பறைகளுடன் கூடிய எஞ்சின்கள் வடிவமைக்கப்பட்டு தென்னக ரயில்வேயில் அந்த எஞ்சின்கள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.