ஜவாஹர்லால் நேரு: சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு அளித்த முதல் டிவி பேட்டி

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சிப் பேட்டியை, 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிசி மீண்டும் வெளியிட்டுள்ளது. முன்னேற்பாடின்றி நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பை வில்லியம் கிளார்க் அறிமுகப்படுத்துகிறார்.

செய்தியாளர்: மாலை வணக்கம்! அநேகமாக இந்த வாரம் முன்னெப்போதையும் விட ஆசியா குறித்த நமது எண்ணங்களை ஆழமாக அலசி வருகிறோம். நமக்கு ஓர் அதிர்ஷடம் அடித்திருக்கிறது. இன்றிரவு ஆசியாவின் மிகப் பிரபலமான அரசியல்வாதி, இந்தியாவின் பிரதமர் நமது அரங்கில் இருக்கிறார்.

மிஸ்டர் நேரு, இங்கு நீங்கள் வந்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். இங்கிருப்பவர்கள் சார்பாகவும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொது மக்கள் சார்பாகவும் பேசுகிறேன்.

தொலைக்காட்சியில் நீங்கள் தோன்றுவது இதுதான் முதல் முறை என நம்புகிறேன். அதற்காக நான் குறிப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நேரு: ஆமாம், நான் இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. உண்மையில், தொலைக்காட்சியைப் பற்றி நான் கேள்விப்பட்டதைத் தவிர, அதுகுறித்துக் கொஞ்சம் தான் தெரியும்.

செய்தியாளர்: நல்லது. இந்த நிகழ்வை உங்களுக்குக் கசப்பானதாக மாற்ற மாட்டார்கள் என்று நான் நம்பும் நபர்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

எனக்கு இடதுபுறம் அமர்ந்திருப்பவர் கிங்ஸ்லி மார்ட்டின், நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழின் ஆசிரியர். அவரை அடுத்து இருப்பவர் எச்வி ஹட்ஸன் (HV Hodson), சண்டே டைம்சின் ஆசிரியர், கடைசியில் இருப்பவரும் உங்களிடம் முதல் கேள்வியை கேட்கப்போகிறவருமான டொனால்டு மெக்லகன், எகனாமிஸ்ட் இதழின் சர்வதேச விவகாரப் பிரிவு ஆசிரியர்.

மகாராணி முடிசூட்டு விழா

ஜின்னாவுடன் நேரு

Getty Images

ஜின்னாவுடன் நேரு

செய்தியாளர்: பிரதமர் அவர்களே, நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பும்போது, முடிசூட்டு விழா நிகழ்வு குறித்துக் கேட்பார்களே, நீங்கள் அவர்களிடம் என்ன சொல்லப் போகிறீர்கள்?

நேரு: நான் அவர்களுக்கு நிறைய விஷயங்களைச் சொல்ல வேண்டும். முக்கியமாக பல வழிகளில் அது சுவாரஸ்யமாக இருந்தது. பிரம்மாண்ட நிகழ்ச்சியையும் தாண்டி என்னை மிகவும் ஈர்க்கும் விஷயம் என்னவெனில் இங்குள்ள கூட்டமும் அவர்கள் நடந்துகொண்ட விதமும் தான். மோசமான வானிலையில் அவர்களுடைய துணிச்சலையும் என்ன நடந்தாலும் தங்களை மகிழ்வித்துக் கொள்ளவேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் உறுதியையும் காணும் எவரும், லண்டன் மக்கள் திரளை மேன்மேலும் விரும்பத் தொடங்கிவிடுவர்.

செய்தியாளர்: ஆனால், நீங்கள் இங்கே மகாராணியின் முடிசூட்டு விழாவுக்கு வந்ததற்கு இந்தியாவில் விமர்சனம் இருக்காதா?

நேரு: நான் இங்கே வந்தபோது இருந்தது. திரும்பிச் செல்லும்போதும் இருக்கும். அதில் சந்தேகமில்லை. ஆனால், மிகவும் அதிகளவு விமர்சனம் இருக்குமெனத் தோன்றவில்லை.

யார் மீதும் வெறுப்பு இல்லை

செய்தியாளர்: மிஸ்டர் நேரு, உண்மையில் இந்தியா ஏன் காமன்வெல்த்துக்கு உட்பட்ட குடியரசாக இருக்க முடிவு செய்தது என்பதை நாங்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என நான் நினைப்பது என்னவென்றால், கடந்த கால வரலாற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் மீது ஏன் மிகச் சிறிதளவே ஆத்திரம் இருக்கிறது? இந்தியா மிகவும் அற்புதமான பெருந்தன்மையுள்ள நாடாக எங்களுக்குத் தெரிகிறது. மிகவும் அபூர்வமான, குறிப்பிடத்தக்க இந்த மன்னிப்பு குறித்து நீங்கள் சற்று விளக்க முடியுமா?

நேரு: பகுதியளவு காரணம் என்னவென்றால் நாங்கள் யாரையும் நீண்ட காலத்திற்கோ அல்லது தீவிரமாகவோ வெறுப்பதில்லை. ஆனால் இந்தப் பல பத்தாண்டுகளில் திரு காந்தி எங்களுக்கு அளித்த பின்புலமே முதன்மையான காரணம் என நினைக்கிறேன்.

செய்தியாளர்கள்: 16 ஆண்டுகள் நீங்கள் சிறையில் இருந்தீர்கள். அதுகுறித்தெல்லாம் உங்களிடம் சீற்றம் இருப்பது போலத் தெரியவில்லையே. உண்மையிலேயே அது ஆச்சர்யமான விஷயம்.

நேரு: ஒரு நபர் சிறிது காலம் சிறைவாசம் அனுபவிப்பது நல்ல விஷயம் என நினைக்கிறேன்.

செய்தியாளர்: நீங்கள் பிரதமராகி ஏழாண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஏழு ஆண்டுகளைத் திரும்பி பார்த்து, இந்தியா தனது சுதந்திரத்தைப் பெற்ற போது வெளிப்படுத்திய நம்பிக்கைகளை எல்லாம் அசைபோட்டு கேள்வி கேட்கப் போகிறேன். இந்த ஆண்டுகளில் திருப்திகரமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக உணர்கிறீர்களா அல்லது உங்களுக்கு ஏமாற்றங்கள் உண்டா?

நேரு: இரண்டும் தான். நாங்கள் நிச்சயமாக நிறைய சாதித்திருக்கிறோம் என்றே நினைக்கிறன். சாதனைகள் நிகழ்த்தப்படாத காலமும் இருந்திருக்கிறது. நாங்கள் செய்ய நினைத்ததைச் செய்து முடிக்கவில்லை. ஆகவே திருப்தியாகவும் திருப்தியற்றதாகவுமே இருந்தது.

இந்திய ஜனநாயக வெற்றி

ஜவாஹர்லால் நேரு

Getty Images

ஜவாஹர்லால் நேரு

செய்தியாளர்: அதைக் கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா? நீங்கள் எதில் ஏமாற்றமடைந்தீர்கள்?

நேரு: இதுவொரு பெரிய கேள்வி. இந்தியாவில் நிறைய விஷயங்கள் உள்ளன.

செய்தியாளர்: நான் உங்களுக்கு எடுத்துக் கொடுக்கலாமா? ஜனநாயகம் மற்றும் இந்தியாவின் அரசியல் ஜனநாயகத்தின் முன்னேற்றம் பற்றி…

நேரு: பொதுவாகச் பேசுவதானால், அரசியல் ரீதியாக நாட்டின் ஒற்றுமையை முன்னெடுத்துள்ளோம் என்றுதான் கூறுவேன். பழைய சமஸ்தானங்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். மிகப் பெரிய அளவில் பொதுத் தேர்தல்களை நடத்தியுள்ளோம். அவை குறிப்பிடத்தக்கவை. நாங்கள் ஒரு நல்ல ஜனநாயகக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பியுள்ளோம்.

பொருளாதாரம் சார்ந்து தான் எங்களுக்கு முதன்மையான சிக்கல்கள் இருக்கின்றன. நாங்கள் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என நம்புகிறேன். முன்னேற்றம் மிக வேகமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

செய்தியாளர்: ஆங்கிலோ – அமெரிக்கன் , பிரிட்டிஷ் – அமெரிக்கன் , பிரிட்டிஷ் காமன்வெல்த் – அமெரிக்கன் என ஜனநாயகத்தின் பொதுவான கொள்கைகளைப் பாதுகாப்பதில் உடன்பாடு மற்றும் ஒத்திசைவுக்கு மிகவும் சிறப்புமிக்க மதிப்பு உள்ளது என ஏற்றுக் கொள்கிறீர்களா?

நேரு: ஆம், நிச்சயமாக.

அரசியல்வாதிகள் சமரசம் செய்யத்தான் வேண்டும்

ஜவாஹர்லால் நேரு

BBC

ஜவாஹர்லால் நேரு

செய்தியாளர்: அதை நோக்கமாகக் கொண்டிருக்கும்போது அதற்கென ஒரு மதிப்பு இருக்கிறது. அட்லாண்டிக்கிற்கு அப்பால் 100% கண்ணுக்குத் தெரியாத பகுதிகளின் கொள்கைகளுடன் சில நேரங்களில் நமது தரப்பிலிருந்து சில சமரசங்கள் தேவைப்படுமல்லவா?

நேரு: ஆனால் மிஸ்டர்.ஹாட்சன், அரசியல்வாதிகள் எப்போதும் சமரசம் செய்துகொள்வார்கள், அவர்கள் செய்யத்தான் வேண்டும்.

ஆனால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள முன்னணி அரசியல்வாதிகளுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து உலகைப் பார்க்கும் ஒரு போக்கு உள்ளது. சரி, அதே கொள்கைகளுடன் டெல்லி அல்லது கராச்சியில் இருந்து பார்த்தால், உலகம் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. புவியியல் முக்கியம்.

சீனாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தொலைதூர நாடுதான் சீனா. இந்தியாவுடன் 2000 மைல் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு அது. உடனடியாக நமக்கு அது வித்தியாசமான காட்சியாகத் தெரிகிறது.

செய்தியாளர்: ஆசியாவிலிருந்து உங்கள் பங்களிப்பு விலைமதிப்பற்றது என்பதை நான் நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன். நான் அதைப் பரிந்துரைக்கவே விரும்பினேன்.

நேரு: காமன்வெல்த் மாநாடுகளின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதுதான். நீங்கள் சற்று மோதலை விரும்பினால், இந்த மாதிரியான வெவ்வேறு கண்ணோட்டங்கள் வெளிவரும். ஆனால் நட்பு ரீதியில் நான் சொல்வதானால் இது சிறந்த புரிதலுக்கு வழிவகுக்கும்.

செய்தியாளர்: மிஸ்டர் நேரு, கேள்விகளுக்கு நீங்கள் பிரதமர் என்ற முறையிலும் பண்டிட் நேருவாகவும் விடையளித்ததற்கு, எங்களின் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் உங்களுக்கு உண்மையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இங்கிலாந்துக்கு நீங்கள் எப்போது வந்தாலும் தொலைக்காட்சியில் எங்களோடு உரையாட எந்த நேரத்தில் விரும்பினாலும் உங்களை வரவேற்கிறேன். நன்றி.

நேரு: நன்றி! நான் எதிர்பார்த்த அளவுக்கு இந்தக் கடைசி அரை மணிநேரம் மோசமாக அமையவில்லை. உண்மையில் நேரம் வேகமாகக் கடந்துவிட்டது. ஒருவேளை உங்கள் கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்ததாலும் அதில் நான் ஈடுபாட்டுடன் இருந்ததாலும் நேரம் முடிந்துவிட்டதா என வியக்கிறேன்.

எவ்வாறாயினும், இது ஒரு இனிமையான தருணமாக இருந்தது, அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இந்த நிகழ்ச்சியை பின்னரும் சிலர் பார்ப்பார்கள் என விரும்புகிறேன். இரவு வணக்கம்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.