திருமணம் செய்வதாக கூறி வரவழைத்து இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்கார முயற்சி: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை: விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்வதாக கூறி நேரில் வரவழைத்து காரில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்ய முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சையை சேர்ந்த விவாகரத்தான 28 வயது பெண் ஒருவர், மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான திருமண தகவல் மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்து இருந்தார். அதே திருமண தகவல் மையத்தில் கும்பகோணத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் பதிவு செய்து இருந்தார். இவர் இணையதளத்தில் தனக்கு தகுந்த வரன் இருக்கிறதா? என பார்த்தார்.

அப்போது மறுமணம் செய்து கொள்வதற்காக பதிவு செய்த பெண்ணின் முகவரி கிடைத்தது. மேலும் அதில் இருந்த செல்போன் எண் மூலம் கும்பகோணத்தை சேர்ந்த அந்த நபர், அந்த பெண்ணிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த பெண்ணிடம், உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டியது இருப்பதால் தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வருமாறு கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் அந்த ஓட்டலுக்கு வந்துள்ளார். அங்கு 3 பேர் இருந்துள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கும், அந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண்ணை 3 பேரும் காரில் அழைத்து சென்றனர். காரில் சென்றபோது மதுபானம் கலந்த குளிர்பானத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்து, அவர்கள் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.  இதனால் அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். கார் வெண்ணாற்றங்கரை அருகே சென்றபோது அந்த பெண்ணின் வாயில் துணியை திணிக்க அந்த நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து சத்தம் போட்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காரை மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர். ஆனால் காரை நிறுத்திவிட்டு கும்பகோணத்தை சேர்ந்த நபர் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

பின்னர் இது குறித்து மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்து இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.