“சாவர்க்கரை கொண்டாடி வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்!" – பாஜகவை சாடும் கொளத்தூர் மணி

புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில், “உண்மையும் புரட்டும்” என்ற தலைப்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதுச்சேரி உருளையன்பேட் சுதேசி பஞ்சாலை அருகில் நேற்று மாலை (20.08.2022) நடைபெற்றது. அந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணி, “திடீரென பா.ஜ.க-வினர் சாவர்க்கரை தூக்கி கொண்டாடுகின்றனர். அதன்மூலம் அவர்கள் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள். ஆனால், நாம் இருக்கும் வரை வரலாற்றை மாற்ற முடியாது என அவர்களுக்கு தெரியவில்லை. இந்திய சுதந்திர வரலாற்றில் பங்குகொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் சாவர்க்கர். இவர் வட இந்திய இந்துமத கொள்கையாளர். ‘ வீர் சாவர்க்கர் ‘ என்று அழைக்கப்படுவார். ஆங்கிலேயரகள் இவருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்திருந்ததாலும் 12 ஆண்டுகளிலேயே விடுவிக்கப்பட்டார்.

கலை நிகழ்ச்சி

இவர் இந்தியாவுக்காக போராடவில்லை. இந்து மதத்திற்காகப் போராடியவர். அதனால்தான் பா.ஜ.க-வினர் இவரை போற்றுகின்றனர். பிரதமர் மோடி நீட் தேர்வை கொண்டு வந்ததன் நோக்கம் இடஒதுக்கீட்டை அழிக்க வேண்டும் என்பதே. நம் இளைஞர்கள் சீரழிய வேண்டும் என மோடி திட்டமிட்டு போதைப் பொருள்களை தமிழகத்தில் இறக்குமதி செய்ய வைத்துள்ளார். நாம் இன்னும் முழுமையான சுதந்திரம் பெறவில்லை. இன்னும் தாழ்த்தப்பட்டோர், தீண்டாமை என்னும் பெயரால் ஒடுக்கப்படுகின்றனர். மோடி அரசு மதவெறி கொண்டது. இந்து மதத்தையே அனைவரும் பின்பற்ற வேண்டும் என எண்ணற்ற சூழ்ச்சிகளை செய்கிறார்.

மாடுகளை கோமாதா என்றும், அதை பாமர மக்கள் உண்ண கூடாதென்று கூறினார். ஆனால், இந்திய நாடு தான் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது. மோடி அவர்கள் மீண்டும் வேத காலத்திற்கு திரும்பலாம் என்று ஒரு வேண்டுகோள் வைத்தார். அப்படி நடந்தால் மீண்டும் மேலோர் ஆதிக்கம் அதிகமாகிவிடும்.

கொளத்தூர் மணி

மோடியின் கோட்பாடுகளுக்கு தமிழ்நாடு ஒன்றே எதிராக செயல்படுகிறது என்பதால் அனைத்து சூழ்ச்சிகளையும் மோடி நமக்கு எதிராகவே செய்கிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.