“அப்பட்டமான உழைப்புச் சுரண்டல்… ஸ்விகி ஊழியர்களின் உரிமையை அரசு மீட்க வேண்டும்” – சீமான்

சென்னை: “ஸ்விக்கி, சொமேடோ, அமேசான், ஓலா, ஊஃபர் உள்ளிட்ட அனைத்து இணையவழிச் சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இணையவழி உணவுச் சேவை நிறுவனமான ஸ்விகி தமது ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தும், ஊக்கத்தொகையை நிறுத்தியும் தொழிலாளர் உரிமையைப் பறிப்பது அவர்களின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும். இரவு – பகல் பாராது மக்கள் பசியைத் தீர்க்கும் ஸ்விகி ஊழியர்கள் உரிமை கேட்டு வீதியில் இறங்கிப் போராடிவருவது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த ஒரு வாரகாலமாக ஸ்விகி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்களின் உரிமையைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஸ்விகி நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளின்படி ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்துள்ளதோடு, அவர்களின் தினசரி மற்றும் வாராந்திர ஊக்கத் தொகையையும் முற்றாக நிறுத்தியுள்ளது. மேலும், மழைக்கால உதவித்தொகை மற்றும் வாகன எரிபொருளுக்கு வழங்கப்படும் படியும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர் தரக்கூடிய பாராட்டுத் தொகையைக்கூட ஸ்விகி நிறுவனம் முறையாக வழங்குவதில்லை என்ற ஊழியர்களின் குற்றச்சாட்டு மிகுந்த பரிதாபத்திற்குரியதாகும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான வேலைநேர உரிமையையும் முற்றாகத் தகர்த்து, ஒரு நாளைக்கான பணி நேரத்தை 12 முதல் 16 மணி நேரங்களாக உயர்த்தியுள்ளது தொழிலாளர் விரோதப்போக்கின் உச்சமாகும்.

ஸ்விகி நிறுவனம் ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்து, ஊக்கத்தொகை பெறுவதற்கான சேவை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்கே பெரும்பாடுபட்டு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளிலும் அவசர அவசரமாக இருசக்கர வாகனங்களில் பயணிக்க ஸ்விகி நிறுவனம் அதன் ஊழியர்களை மறைமுகமாகத் தூண்டுவது, அவர்களை விபத்தில் சிக்க வழிவகுத்து, அவர்களின் உயிரோடு விளையாடும் கொடும்போக்காகும்.

புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களிலும், கரோனா பெருந்தொற்றுக் காலங்களிலும் இரவு-பகல் பாராது பணிபுரிந்த ஊழியர்களைத் துச்சமெனத் தூக்கி எறிவதும், அவர்களின் உரிமையைப் பறிப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும்.

எனவே, தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, ஸ்விகி ஊழியர்கள் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஸ்விகி, சொமேடோ, அமேசான், ஓலா, ஊஃபர் உள்ளிட்ட அனைத்து இணையவழிச் சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.