உங்க ஆட்சியின் திட்டத்தை, இவங்க செயல்படுத்துவாங்க என, அப்பாவித்தனமா எதிர் பார்க்கிறீங்களே!| Dinamalar

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:

அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட, ‘அம்மா மினி கிளினிக்’குகள் தொடர்ந்து இயங்கியிருந்தால், தற்போது பரவலாக தொற்றும் சளி, இருமல், இன்புளுயன்சா காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு சிகிச்சை பெற, மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
இப்போது, ஆட்சியாளர்களுக்கு மினி கிளினிக்குகளின் அருமை தெரிந்துஇருக்கும். இதன் பிறகாவது, மூடப்பட்ட மினி கிளினிக்குகளை மீண்டும் துவக்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

உங்க ஆட்சியின் திட்டத்தை, இவங்க செயல்படுத்துவாங்க என, அப்பாவித்தனமா எதிர் பார்க்கிறீங்களே!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

அரசே மது விற்கும் அவலத்தை நிறுத்த வேண்டும். மதுவால் பெண்கள் படும் துயரத்தை சொல்லி மாளாது. இது, தெரிந்தும் மது விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு திட்டமிடுகிறது.

இது, தமிழர்களுக்கு, தமிழ் பெண்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மதுக் கடைகளை மூடிட்டா, ‘குடி’மகன்களுக்கு துரோகம் செய்ததாகி விடும்னு ஆட்சியாளர்கள் பயப்படுறாங்களோ, என்னவோ?

காங்., மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் பேட்டி:

காங்., – எம்.பி., ராகுலின் நடைபயணத்தால், மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. காங்., தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கும். தற்போது எங்களின் நோக்கம், செயல்பாடுகள், ராகுலின் நடைபயணம் நோக்கியே உள்ளது.

கட்சித் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே, சோனியா குடும்பத்தின் ஆசி வேண்டும் என்ற நிலை தான் உட்கட்சி ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறதே!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:

தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததில்லை. மரியாதை கிடைப்பதில்லை என்பதை, தி.மு.க.,வினர் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். சமீபத்தில், தி.மு.க., அமைச்சர்கள், பெண்களை இழிவுப்படுத்தி பேசி இருப்பது, மிகவும் கண்டிக்கத்தக்கது.

வாஸ்தவம் தான்… ஒரு பெண்ணா நீங்க தெரிவிக்கிற எந்த கண்டனங்களுக்காவது, எந்த அமைச்சராவது மரியாதை குடுத்து பதில் தர்றாங்களா, பாருங்க!

பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா பேட்டி:

‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ தடை செய்யப்பட்டது, ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு குறித்து தெளிவாக கூறியுள்ளார். அதில், ‘தடை விதிக்கப்பட்ட இயக்கத்திற்கு யாராவது துணை போனால், அதுவும் சட்டவிரோதம்’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் உத்தரவை, மாநில அரசு மீறாது என நம்பலாம்… ஏற்கனவே, 356வது சட்டப்பிரிவால சூடுபட்டவங்களாச்சே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.