சர்வதேச முதியோர் தினம் | முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு விருது – ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ சார்பில் வழங்கப்பட்டது

சென்னை: சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ சார்பில் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு விருது வழங்கப்பட்டது.

முதியோரை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறவில்லை.

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பு சார்பில் சர்வதேச முதியோர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

கோல்டன் விருது

நிகழ்ச்சியில், சமூகநலத் துறை இயக்குநர் ரத்னா பங்கேற்று முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜனுக்கு ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பின் உயரிய விருதான கோல்டன் விருதை வழங்கி கவுரவித்தார். இதைத்தொடர்ந்து, முதியோர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர், முதியோர் இடையே குழு நடனம் நடைபெற்றது. இதில், பல்வேறு முதியோர் இல்லங்களில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த முதியவர்கள் தங்களது குழுக்களுடன் இணைந்து நடனம் ஆடினர்.

போட்டிகள், பரிசுகள்

மேலும், மாறுவேடப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பிற்பகல் 3 மணியளவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் நீதிபதி ஏ.நசீர் அகமது பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற ‘சூப்பர் தாத்தா’ பவுல்(70) மற்றும் ‘சூப்பர் பாட்டி’ லட்சுமி(75) ஆகியோருக்கு கிரீடம் அணிவித்து கவுரவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.