காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக். 17) காலை தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை கடந்த செப். 22ஆம் தேதியும், வேட்பு மனு தாக்கல் செப். 24ஆம் தேதியும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை வரும் அக். 19ஆம் தேதி நடைபெறுகிறது.
தலைவர் பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். நீண்ட ஆண்டுகள் கழித்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் அல்லாதவர்கள் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில், தற்போது பய “பாரத் ஜோடா யாத்ரா” என்ற இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு, கேரளாவை அடுத்து தற்போது அவர் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதனால், அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பாரா அல்லது வாக்களித்தால் எங்கு தனது வாக்கைச் செலுத்துவார் என்ற கேள்வியும் பரவலாக எழுந்தது. இந்நிலையில், அதற்கான விடையை அக்கட்சியின் பொதுச்செயலாளரான (பொறுப்பு) ஜெய்ராம் ராமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
There’ve been queries on where @RahulGandhi will cast his vote tomorrow for Congress Presidential election. There should be no speculation. He will be voting at the #BharatJodoYatra campsite in Sanganakallu, Ballari along with around 40 other Bharat Yatris who are PCC delegates.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) October 16, 2022
அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,”ராகுல் காந்தி நாளைய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பாரா போன்ற கேள்விகள் எனது கவனத்திற்கு வந்தன. எந்த அனுமானங்களும் வேண்டாம். அவர் யாத்திரையின் போது, பல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனக்கல்லு என்ற இடத்தில், 40 சக காங்கிரஸ்காரர்களுடன் வாக்களிக்க உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, யாத்திரையின் போது பொதுமக்கள் சிலருக்கு மின்சாரம் தாக்கியவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ., தூரத்தை 150 நாள்களில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். 12 மாநிலங்களில் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா அடுத்து கடந்த செப். 30ஆம் தேதி அன்று கர்நாடகா வந்தடைந்தார். கர்நாடகாவில் 21 நாள்கள் அங்கு நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்து வட மாநிலங்கள் நோக்கி பயணிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.