சேலம்: சேலத்தில் துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வழங்காததால் 30 நரிக்குறவர் இன வாலிபர்களுக்கு கல்யாணமே ஆகல என கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் ஆதங்கப்பட்டனர். சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம், காரிப்பட்டி, வாழப்பாடி, தாரமங்கலம் பகுதிகளில் நரிக்குறவர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இச்சமூகத்தில் கௌரவத்திற்காகவும், சமுதாயத்தின் அடையாளமாகவும் துப்பாக்கி வைத்துக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது, துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவதால், நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்துக் கொள்ளக்கூடாது என போலீசாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு அயோத்தியாபட்டணம் நரிக்குறவர் காலனி ஏரிக்காடு பகுதியை சேர்ந்த சங்கர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வந்தனர். அவர்கள் கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், ‘தாரமங்கலத்தில் 6 பேருக்கும், அயோத்தியாப்பட்டணத்தில் 10 பேருக்கும் நாட்டு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம். ஆனால், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஆகவே அம்மனுவை ஏற்று துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் வழங்க வேண்டும்,’’ எனக்கூறியிருந்தனர்.
பின்னர் நரிக்குறவர் சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘அயோத்தியாப்பட்டணம் பகுதியில் நாங்கள் 50 குடும்பங்களாக வசிக்கிறோம். எங்கள் சமூகத்தில் ஆண் மகன்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு பலமுறை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. நாங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளவில்லை. எங்கள் சமுதாய வழக்கப்படி துப்பாக்கி வைத்திருக்கும் ஆண் மகனுக்கு மட்டுமே திருமணம் நடைபெறும். திருமணத்தின்போது, துப்பாக்கியை வைத்து மணமகள் கழுத்தில் ஊசிமணி மற்றும் பாசிமணி கொண்டு தாலி கட்டுவது எங்களின் சமுதாய மரபாக உள்ளது. இதற்காக துப்பாக்கி உரிமம் வழங்க கேட்கிறோம். சமீப காலமாக துப்பாக்கி உரிமம் வழங்காத காரணத்தால் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறது. அதனால், துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி தந்து உதவ வேண்டும் என கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்,’’ என்றார்.