கலபுரகி : இறந்த மூதாட்டியின் உடலை தெருநாய்கள் கடித்து தின்ற இடத்தில், பஞ்சாயத்து அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
கலபுரகி கானாபுரா அருகே தாவம்மா கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகில் 16ம் தேதி காலை, மூதாட்டியின் இறந்த உடல் கிடந்தது. இவரின் உடலை, தெருநாய்கள் சாப்பிட்டபடி இருந்தன. இது குறித்து கோவில் ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் மூதாட்டி உடல் கிடந்த இடத்தில், நேற்று மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கிரிஷ், 45, அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்குள்ள அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் தகவல்களை கேட்டு பெற்று கொண்டனர்.
மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கிரிஷ் கூறுகையில், “இங்கு ஒவ்வொரு பவுர்ணமி நாளில் முதியவர்களை கொண்டு வந்து விட்டு செல்வது வழக்கம் உள்ளது. அத்தகையோர் மீது வழக்கு பதிவு செய்ய, மூத்த குடிமக்கள் நல துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
”இங்கு இருளான இடத்தில் சோலார் மின் விளக்குகள், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். முதியவர்களை அரசு முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம். இது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். மூதாட்டியின் உடலை, நாய்கள் தின்றது குறித்து விசாரணை நடக்கிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement