தீபாவளி விடுமுறை காரணமாக சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது சாத்தனூர் அணை,  119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 115.10 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 11 கண் மதகு வழியாக தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 4200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தீபாவளி விடுமுறை காரணமாக இன்று காலை முதல் பொதுமக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் குடும்பம் குடும்பமாக சாத்தனூர் அணைக்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர்.

அங்குள்ள ஆதாம்-ஏவால் பூங்கா,  கலர் மீன் கண்காட்சி, புலியை முறத்தால் விரட்டிய வீரமங்கை பார்க், ராக்கெட் பார்க், தாமரைக்குளம், செயற்கை நீரூற்று, யானை பார்க், ஈஸ்வரன் பார்க், டைனோசர் பார்க், தொங்கு பாலம், அர்த்தமுள்ள கதை சொல்லும் பார்க் ஆகியவற்றை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர். பூங்காவை சுற்றி பார்க்க ஒரு நபருக்கு ஐந்து ரூபாய் கட்டணமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20, கனரக வாகனங்களுக்கு ரூ.50 கட்டணமாக பொதுப்பணித்துறை மூலம் வசூலிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பொதுப்பணி துறைக்கும் வருவாய் அதிகரித்தது. மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. சாத்தனூர் அணை போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை உள்ளே எடுத்து செல்லாமல் சோதனையிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.