கோவை வழக்கில் புதிய திருப்பம்… சிக்கிய 6வது நபர்- அதிரடி காட்டிய நீதிமன்றம்!

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரணை நடத்தியதில் காரில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் விபத்து நடந்த இடத்தில் ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவை சிக்கின.

இதனால் பயங்கரவாத சதியாக இருக்குமோ? என சந்தேகம் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போலீசார், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்தை கைப்பற்றினர். இதற்கிடையில் வழக்கு விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். இந்த சூழலில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முன்னதாக தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்.பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவை விரைந்தனர்.

அங்கு கோவை மாநகர காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர். இந்நிலையில் கோவை கார் வெடிப்பு கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி, 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டார். இந்நிலையில் திடீர் திருப்பமாக ஜமேஷா முபினின் உறவினர் அப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே போலீசாரின் விசாரணை வளையத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி 2019ஆம் ஆண்டு ஜமேஷா முபினிடம் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இவ்வாறு கோவை வெடிவிபத்து சம்பவத்தில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.