திண்டுக்கல்: நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை, மகனுடன் பலி! – மனைவியின் கண்முன்னே நேர்ந்த சோகம்

​திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்​ (45)​.​ இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன். மகன் விபுல்குமார் (15) நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில்​​ ​​பத்தாம் வகுப்பு படி​த்து வந்தார். 

இறப்பு

இந்நிலையில், ராஜ்குமார் தன் வீட்டின் அருகே உள்ள மாமனார் தங்கராஜூக்குச் சொந்தமான தோட்டத்திலுள்ள கிணற்றில் ​மகனுக்கு ​நீச்சல் ​கற்றுக்கொடுத்த மகன், மனைவியுடன் சென்றுள்ளார். கிணற்றின் மேலே மனைவி நின்று கொண்டிருக்க, ராஜ்குமார் அவரின் சேலையை மகனின் இடுப்பில் கட்டி அவரை கிணற்றில் இறக்கிவிட்டுள்ளார். ஒருமுனையை கிணற்றின் உள்ளே இருக்கும் திட்டில் நின்று கொண்டு பிடித்திருந்தார்.

அப்போது திடீரென விபுல்குமாரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த சேலை அவிழ்ந்துவிட்டதால், பயத்தில் நீந்தாமல் நீரில் மூழ்கியுள்ளார். மகன் நீரில் மூழ்கியதைப் பார்த்த ராஜ்குமார் உடனடியாக உள்ளே குதித்து மகனை காப்பாற்றி கரைக்கு கொண்டுவர முயன்றார். ஆனால் பயத்தில் இருந்த விபுல்குமார், ராஜ்குமாரின் கழுத்தை பிடித்துக்கொண்டு விடாததால் அவராலும் நீந்தமுடியாமல் இருவரும் நீரில் மூழ்கிவிட்டனர்.

கிணறு

அலறல் சத்தம் கேட்டதும் அதிர்த்தியடைந்த ராஜ்குமாரின் மனைவி கிணற்றின் மேலிருந்து செய்வதறியாது கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அவரின் கண்முன்னே கணவரும், மகனும் நீரில் மூழ்கிவிட்டனர். இதையடுத்து அருகே இருப்பவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய ராஜ்குமார், விபுல்குமாரை சடலமாக மீட்டனர்.

இது குறித்து தீயணைப்பு வீரர்களிடம் விசாரித்தோம். “சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் படிக்கட்டுகள் இல்லை. உள்ளே இருக்கும் திண்டுகளில் கால் வைத்துத்தான் இறங்க வேண்டும். கிணற்றின் உள்ள பிடித்துக் கொள்ள எவ்வித பிடிமானமும் இல்லை. இதனால்தான் ராஜ்குமாரால் மகனை பிடித்துக்கொண்டு தாக்குபிடிக்க முடியவில்லை. மேலும் அவரின் கழுத்தை விபுல்குமார் பிடித்ததால் நீண்டநேரம் நீரில் மேலே நீந்திக்கொண்டிருக்க முடியாமல் தந்தை, மகன் இருவரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்” என்றனர்.

மீட்புப்பணியில் தீயணைப்பு துறையினர்

​நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை, மகனுடன் பலி​யான சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது​.​

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.