12 ரெளடிகளுக்கு சம்மன்; க்ளைமாக்ஸை நெருங்குகிறதா ராமஜெயம் கொலை வழக்கு?

தி.மு.க., முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ட் 29-ம் தேதி கொலைசெய்யப்பட்டார். திருச்சி தில்லைநகரில் நடைப்பயிற்சி சென்றபோது காரில் கடத்திச் செல்லப்பட்ட ராமஜெயம், திருச்சி கல்லணை அருகேயுள்ள திருவளர்சோலை பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிபிஐ, சிபிசிஐடி என பலர் விசாரித்தும் தற்போது வரை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வரும் சூழலே இருக்கிறது. தற்சமயம் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு, ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை வேகப்படுத்தி பலரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் திருச்சிக்கு வந்திருந்த சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவினரை நேரில் சந்தித்து விசாரணை குறித்து கேட்டறிந்தார்.

ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக உண்மை கண்டறியும் சோதனைக்கு நேரில் ஆஜராக 12 ரெளடிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது

ஷகீல் அக்தர் திருச்சி வந்தபோதே, ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்திற்குரிய 20 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்தவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக உண்மை கண்டறியும் சோதனைக்கு நேரில் ஆஜராக 12 ரெளடிகளுக்கு திருச்சி கோர்ட் மூலமாக சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்திலுள்ள பிரபல ரௌடிகளான சாமி ரவி (ரவிக்குமார்), திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சத்யராஜ் (சீர்காழி சத்யா), தினேஷ், திலீப் (எ) லட்சுமி நாராயணன், தென்கோவன் (எ) சண்முகம், ராஜ்குமார், சிவா (குணசேகரன்), சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த 12 பேரும் வரும் நவம்பர் 1-ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமெனச் சொல்லப்பட்டிருக்கிறது.

 நவம்பர் 1-ம் தேதியன்று இந்த 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்களா? விசாரணையில் என்ன முடிவு தெரியவரும்? இந்த 12 பேர்தான் ராமஜெயம் கொலை வழக்கின் குற்றவாளிகளென சிபிசிஐடி போலீஸாரின் இறுதிப் பட்டியலில் இருக்கிறார்களா? போன்றவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.