கொட்டிய தலைமுடி, தடைபட்ட திருமணம்; மருத்துவரை குற்றம்சாட்டி தற்கொலை செய்த இளைஞர்!

கேரளாவில், தலைமுடி கொட்டும் பிரச்னை தீராத நிலையில் மருத்துவரை குற்றம்சாட்டிவிட்டு மெக்கானிக் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலருக்கும், கவலை தரும் பிரச்னைகளில் முக்கியமானது தலைமுடி உதிர்வது. ’முடி கொட்டும் பிரச்னைதானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது; தலைமுடி அழகை, தோற்றத்தை தீர்மானிக்கிறது’ என்று பலரும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால், கேரளாவில், தலைமுடி கொட்டும் பிரச்னையானது இளைஞரை விரக்தியின் உச்சத்திற்கே தள்ளி, முடிவில் மரணத்தில் கொண்டு போய் நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

தலைமுடி உதிர்வு

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், அதோலி பகுதியைச் சேர்ந்தவர் கே. பிரசாந்த், வயது 29. மெக்கானிக் தொழில் செய்து வந்த இவருக்கு, ஹார்மோன் பிரச்னையால், 2014-ம் ஆண்டில் இருந்தே தலைமுடி உதிரும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்காக சருமநல மருத்துவரை அணுகி, அதற்கு மருந்துகளையும் உட்கொண்டு வந்துள்ளார். எனினும், தலைமுடி கொட்டும் பிரச்னை தீரவில்லை. இதுபற்றி மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும், இப்பிரச்னை தொடர்ந்தது; அவரது புருவ முடிகளும் உதிரத் தொடங்கியதால், கவலையில் ஆழ்ந்தார்.

தலைமுடி உதிரும் பிரச்னை, பிரசாந்தின் திருமணத்திற்கும் தடையாக இருந்துள்ளது. தலை வழுக்கையாக மாறத் தொடங்கியதுமே, பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதை அவர் தவிர்க்கத் தொடங்கினார்; நண்பர்களை சந்திப்பதையும் தவிர்த்தார். ஒருகட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான பிரசாந்த், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் தனது தற்கொலைக்கு, சரிவர சிகிச்சை அளிக்காத மருத்துவரே காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இது தொடர்பாக, பிரசாந்தின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அதோலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மருத்துவ அலட்சியம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தலைமுடி உதிர்வு பிரச்னை, இளைஞரின் உயிரை பறித்த சம்பவம், கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்கொலை

இழப்புகளும் துயரங்களும் பூமிக்கு புதிதல்ல. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை. தற்கொலை எதற்குமே தீர்வல்ல!

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:

தற்கொலைத் தடுப்பு மையம் – 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் – 044 – 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் – 1091

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.