அமெரிக்காவில் போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து| Dinamalar

டல்லாஸ் : அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த பழைய போர் விமான சாகச நிகழ்ச்சியின் போது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. இதில், ஆறு பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில், பழைய போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடப்பது வழக்கம். இதை நேரடியாக பார்த்து ரசிக்க ஏராளமானோர் திரள்வர்.

இந்நிலையில், வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில், போர் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, ‘பி 17’ மற்றும் ‘பி63 கிங் கோப்ரா’ ரக போர் விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இரண்டு தீ பந்துகளாக வெடித்து சிதறிய விமானங்கள் கருகி விழுந்தன. டல்லாஸ் விமான நிலையத்தின் புல்வெளியில் சிதறிக்கிடந்த பாகங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

அந்த விமானங்களில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது உடனடியாக தெரியவில்லை. இருந்தாலும், ஆறு பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

பி 17 போர் விமானத்தில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்றும், பி 63 கிங் கோப்ரா விமானத்தில் ஒரு பைலட் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

அந்த விமானத்தில் கட்டணம் செலுத்தி வெளியாட்கள் யாரும் பயணிக்கவில்லை என தெரியவந்துள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய ஆய்வாளர்கள் சம்பவ இடத்தில் விசாரணையை துவக்கி உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.