கேரளா: 8 வகையான வண்ண மலர்களால் நாள்தோறும் ஐயப்பனுக்கு நடைபெறும் புஷ்பாபிஷேகம்

சபரிமலையில் சஐயப்பனுக்கு மிகவும் பிடித்த ‘புஷ்பாபிஷேகம்’ சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. சபரிமலையில் நடக்கும் ஒவ்வொரு சிறப்பு பூஜையின் பலன்களையும் பெற முன்பதிவு செய்த பக்தர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
image
இந்நிலையில், சபரிமலையில் காலையில் இருந்து நடக்கும் நெய்யாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளால் சாமி ஐயப்பனுக்கு உஷ்ணம் ஏற்படும். இதை தணிக்க தினமும் மாலை 7 மணிக்கு துவங்கி இரவு ஒன்பது மணி வரை ‘புஷ்பாபிஷேகம்’ நடைபெறும். இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை சன்னதிக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான பூஜையும் இதுதான். அதே நேரம் உத்திஷ்டகார்ய சித்திக்கு செய்யப்படும் புஷ்பாபிஷேகம் சுவாமி ஐயப்பனுக்கு மிகவும் பிடித்தமான அபிஷேகம் என்று நம்பப்படுகிறது. சபரிமலை தந்திரி தலைமையில் நடைபெறும் புஷ்பாபிஷேகத்திற்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
image
தாமரை, தத்தி, துளசி, கூவளம், அரளி, சாமந்தி, மல்லிகை மற்றும் ரோஜா ஆகிய எட்டு வகையான மலர்கள் புஷ்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த மலர்கள் அனைத்தும் தேனி, திண்டுக்கல், ஓசூர் பகுதிகளில் இருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. சன்னிதானத்தில் தினமும் 12 புஷ்பர்ச்சனைகள் நடைபெறுகின்றன. நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை 461 புஷ்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன.
image
சபரிமலையில் புஷ்பார்ச்சனை மட்டுமின்றி அஷ்டபிஷேகம், களபாபிஷேகம், நேயாபிஷேகம், மாளிகைப்புறத்தில் பகவதிசேவை ஆகியவையும் முக்கிய பூஜைகள். காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை அஷ்டாபிஷேகமும், மதியம் 12.30 மணிக்கு களபாபிஷேகமும், அதிகாலை 3.30 மணி முதல் 7 மணி வரை நெய் அபிஷேகமும் நடைபெறுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.